3933
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில் லா, உல கோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே. 41
3934
ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
தூயவன் தீதில் இராமா னுசன்தொல் லருள்சுரந்தே. 42
3935
சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறுகலியைத்
துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே. 43
3936
சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன்திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே. 44
3937
பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற்
காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என் றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்
கூறும் பரமன்று இராமா னுசமெய்ம்மை கூறிடிலே. 45
3938
கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மரையுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம்புதுந் தானைத் திசையனைத்தும்
ஏறும் குணனை இராமா னுசனை இறைஞ்சினமே. 46
3939
இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
தறம்செப்பும் அண்ணல் இராமா னுசன்,என் அருவினையின்
திறம்செற் றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே
நிறைந்தொப் பறவிருந் தான், எனக் காரும் நிகரில்லையே. 47
3940
நிகரின்றி நின்றவென் நீசதைக்கு நின்னரு ளின்கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்குமஃ தேபுகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமா னுச இனி நாம்பழுதே
அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மானபின்னே? 48
3941
ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறுசமயம்
போனது பொன்றி யிறந்தது வெங்கலி பூங்கமலத்
தேனதி பாய்வயல் தென்னரங் கன்கழல் சென்னிவைத்துத்
தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே. 49
3942
உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம்
பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்
எதித்தலை நாதன் இராமா னுசன்றன் இணையடியே. 50