சாளக்கிராம யாத்திரை!

விழாக்கள் விசேஷங்கள்

நேபாளத்தில் ஏற்படும் இத்தகைய நெருக்கடிகளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் கோடிக்கணக்கான இந்துக்களின், இந்தியர்களின் ஆன்மிக வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே அங்கு அமைதி திரும்பி, முன்பு போலவே ஆன்மிக நெறி தழைக்கவேண்டும். இதற்கு இந்திய அரசு உதவ வேண்டும்.

அண்மையில் அடியேன் நேபாளம், சாளக்கிராமத்துக்குச் சென்று வந்தேன். அந்த அனுபவங்களை இங்கே தருகிறேன்.

நேபாளம் செல்ல தனி பாஸ்போர்ட் தேவையில்லை. ரேஷன் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை ஏதேனும் இருந்தால் போதும். கோரக்பூர், சோனாலி, பைரவா தாண்டி நேபாள எல்லையை அடையலாம். அதிகாரிகளின் பரிசோதனைகளுக்குப் பிறகு மலைப்பாதையில் சென்று 10,000 அடி உயரத்தில் போக்ரா என்ற இடத்தை அடைய வேண்டும். போக்ரா விமானத் தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மேலும் 5000 அடி உயரத்தில் பயணித்தால் சாளக்கிராமம் சேரமுடியும்.

போக்ராவில் நாங்கள் தங்கியிருந்த லும்பினி  ஹோட்டலின் மேல் மாடியிலிருந்து நோக்கினால் தொலைவில் அன்னபூர்ணா சிகரம் காலை சூரிய ஒளியில் தகதகவென்று காட்சியளிக்கிறது. அது மீன் வாய் போன்று இருக்கிறது. சாளக்கிராமம் செல்ல ஒன்றுக் கொன்று குறுக்காக அமைந்துள்ள ஏழு மலைகளைக் கடக்க வேண்டும். வழியில் ஜோன்ஸம் என்ற ஹெலிகாப்டர் தளம் உள்ளது. அங்கிருந்து சிக்னல் கிடைத்த பின்தான் போக்ராவிலிருந்து ஹெலிகாப்டர் கிளம்பும்.

சில சமயங்களில் மூடுபனி அதிகம் இருக்கும். பனி மழை அல்லது கனமழை பெய்யும். 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச ஆரம்பித்து விடும். இவற்றில் ஏதாவது ஒன்று தடையாக இருந்தால் நாம் பயணத்தை ஒத்திப்போட வேண்டியதுதான்.

எங்கள் குழு மூன்று நாட்கள் போக்ரா விமான நிலையத்தில் மணிக்கணக்காகக் காத்திருந்தது.

நான்காம் நாள் காலை சூழ்நிலை சாதகமாக இருந்தது. காலை 7.30 முதல் மதியம் 3.00 மணி வரை ஹெலிகாப்டர் பயணம். ஹெலிகாப்டரில் 25 பேர் அமரலாம். அதில் பயணித்துக் கொண்டே கைலாஷ், காஞ்சன சிருங்கா, தவளகிரி, அன்னபூர்ணா மலைச் சிகரங்களின் அற்புத அழகைக் கண்டு அனுபவித்தோம்.

ஹெலிகாப்டர் தளத்திற்கு வெகு அருகில் 65 படிகள் ஏறியவுடன் கோவில் உள்ளது. சுமார் 1 மணி நேரம் அவகாசம் தருகிறார்கள். கோவிலுக்கு அருகில் கண்டகி நதி பயங்கர வேகத்துடன் பாய்ந்து கொண்டிருக்கிறது. பக்தர்களின் வசதிக்காக கோவில் பிராகாரத்திலேயே 108 கோமுக ஊற்றுகள் அமைத்துள்ளார்கள். எலும்பைத் தாக்கக் கூடிய அந்தக் குளிர் நீரை தலையில் தெளித்துக் கொண்டோம். பெருமாளை சேவித்துவிட்டுத் திரும்பினோம். தாயார், பெருமாளுடன் சீதாமாயி, குசலவர்கள், உடையவர் திருவுருவங்களும் கண்டு ஆனந்திக்கலாம். தீர்த்த பிரஸாதம், சடாரி நாங்கள் ஒருவருக்கொருவர் வழங்கிக் கொண்டோம்.

போக்ராவில் தங்கியிருக்கையில் அங்குள்ள அழகான இயற்கையாக அமைந்துள்ள ஏரி, தேவி நீர்வீழ்ச்சி இரண்டையும் பார்த்து ரசித்தோம். சிறிய கடைத்தெரு.

போக்ராவிலும் காட்மாண்டு நகரத்தின் வர்த்தக வளாகத்திலும் சாளக்கிராமங்கள் விலைக்குக் கிடைக்கின்றன. முன் காலத்தைப் போல் மூர்த்தங்களை சோதித்து வாங்க இயலவில்லை. பலவித வடிவங்களில் சாளக்கிராமங்கள் கிடைக்கின்றன. பெரியதாக இருந்தால் அவற்றை சரிபாதியாக உடைத்துக் காண்பித்து விற்பனை செய்கிறார்கள். சாளக்கிராமத்தில் தங்க ரேகைகள் இருப்பதாக நேபாள மக்கள் நம்புகிறார்கள். இக்கற்கள் உலகில் வேறு எந்த இடத்திலும் காணப்படுவதில்லை; கண்டகி நதியில்தான் காணப்படுகின்றன. மிக விசேஷ மூர்த்தம் பெற வேண்டுமானால் மிக உயரத்திலுள்ள தாமோதர் குண்டம் செல்ல வேண்டும். அதற்கு நேபாள அரசின் அனுமதி தேவை.

விஞ்ஞான நோக்கில் பார்த்தால் சாளக்கிராமம் என்பது அம்மோனைட் ammonite fossile தான். இவை ஒரு வகை பூச்சிக் கூடுகள்! இவை உருவெடுப்பதற்கு ஆண்டுகள் பலவாகும். பரிணாமவாதக் கொள்கையின் படி, வîரகீடம் என்ற பூச்சி தன்னைச் சுற்றி உள்ள துளசி தளங்களைத் தின்று கட்டிக் கொள்ளும் கூடு. அது மறைந்து வெகுகாலத்திற்குப் பிறகு இவை உருவாகின்றன. இப்போது கிடைக்கும் சாளக்கிராமங்கள் விஷ்ணு மூர்த்தங்களே! முன்பெல்லாம், நேபாள மன்னர்களின் பழைய அரண்மனை அதிகாரிகளை சந்தித்து, அவர்கள் அனுமதி பெற்று, அரண்மனையிலிருந்து கற்களைப் பெற்றுக் கொண்டார்களாம். அது அவ்வளவு எளிதல்ல! ஆனால், தற்போது நேபாள நாடு அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ளதால் இப்போது கேள்விக்குறிதான்!

காட்மண்டு நகருக்கு வெளியே அரவணைத்துயிலும் பெருமாளின் அற்புத உருவம் கண்கொள்ளாக் காட்சியாகும். அங்குள்ள மக்கள் அந்தத் திருவுருவத்தை பூடா நீல்கண்டா என அழைக்கின்றனர். மிகப்பழமையான நீல கழுத்தை (மேனி) உடையவர் என்று பொருள். மிகப் பெரிய தடாகம். பாம்புப் படுக்கையாக இல்லாமல் எல்லாப் பக்கங்களிலும் சுருள்சுருளாகச் சுற்றிக் கொண்டு பெருமாளுக்கு சொகுசு மெத்தையாகத் தன்னை ஆக்கிக் கொண்டுள்ளது. சயனப் பெருமாள் தம் கைகளில் சங்கு, சக்கரம், கதை, சாளக்கிராமம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். தடாகத்தில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

முன்னொரு காலத்தில் குடியானவன் வயலைத் தோண்டும்போது சில உருவம் கிடைத்ததென்றும், அரசாங்கத்திற்குத் தெரிந்தவுடன் மன்னர் கோயில் கட்ட முயற்சிகள் எடுத்துக் கொண்டார் என்றும், ஆனால் பகவான் தனக்குக் கோயில் வேண்டாமென்றும், கூரைகூடத் தேவையில்லை என்றும் மன்னனின் கனவில் சொன்னாராம். மக்களால் ஆராதிக்கப்படும் ஜலநாராயணர், இயற்கை எழிலுடன் அருள் பாலிக்கிறார்.

பசுபதிநாதர் கோவிலும் மிகப் பெரியது. தஞ்சை கோயில் நந்தியைப் போல மிகப் பெரிய நந்தி இருக்கிறது. ஆயிரம் லிங்க உருவங்களுக்கு ஒரே சமயத்தில் அபிஷேகம் நடப்பதாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.

திபேத்திற்கு அருகில் நேபாளம் அமைந்திருப்பதால் திபேத்தின் புத்தமத சாயலை சாமான்ய மக்களின் வாழ்க்கையில் காணலாம். போக்ரா விமான நிலையத்தில் காத்திருக்கையில் அங்குள்ள வரவேற்பு, விசாரணை அலுவலகத்தில் நேபாள மக்களின் மொழி, வாழ்க்கை, இலக்கியம், வரலாறு, திருவிழாக்கள் பற்றிய புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. பொதுவாக எல்லாரும் ஹிந்தி நன்றாகப் பேசகிறார்கள். திருவிழாக்களில் முக்கியமானவை – புத்தாண்டு, தீபாவளி, காளிபூஜா, தசரா, ராம்நவமி, கிருஷ்ண ஜெயந்தி, புத்த பூர்ணிமை, சிவராத்திரி…

சாளக்கிராமக் கோவிலில் காணப்படும் ராமானுஜரை(உடையவரை)க்கூட, புத்தமத குரு என குறிப்பிடுகிறார்கள். லும்பினிக் தோட்டத்தில்தான் புத்தர்பிரான் அவதரித்தார். குரு ரிப்போக் என்பவர்தான் நேபாள புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். வடமொழியில் இவரது பெயர் பத்மசம்பவா என்பதாகும். 108 கோமுக நீருற்றுகள் – புத்தமதக் கோட்பாடுகளைக் குறிக்கும் சும்மிங் க்யாட்சா என்பது அவர்களது நம்பிக்கை. சாளக்கிராமம் கோவில் அமைந்துள்ள குன்றுக்கு சற்றே அருகில் புத்த ஆலயம் காணப்படுகிறது.

சாளக்கிராமத்தை நேபாளத்தவர்கள் முக்திநாத் என்று அழைக்கின்றனர். முக்திநாத்துடன் துவாரகைநாத், பத்ரிநாத், கேதார்நாத், பசுபதிநாத் என்று திருத்தலங்களை பணிவுடனும் பெருமையுடனும் வழிபடுகிறார்கள். அதே போன்று கங்கைக் கரையில் அமைந்திருக்கும் பிந்துமாதவர் கோவிலுடன் வேணி மாதவர், சேது மாதவர், முக்தி மாதவர் என்ற மூன்றையும் இணைத்து இந்தியாவுடன் தங்கள் நெருக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

– தி.ப.வானமாமலை

 

Leave a Reply