மாமியார் ஆகிவிட்டால்..?

விழாக்கள் விசேஷங்கள்

தாலி கட்டி முடித்தாகிவிட்டது! இதோ, இன்னுமொரு தம்பதி ஆண்டவன் அருளால் இணைக்கப் பட்டனர். ஒரு நொடி எல்லோர் மனத்திலும் நெகிழ்ச்சி! “மாப்பிள்ளை வந்தாச்சா?” மரியாதையான கேள்விகள், நானும் என் பங்கிற்கு தம்பதியரை ஆசீர்வதிக்க எழுந்தேன். மணமகனின் தாய்க்கும், எனக்கும் தெரிந்த தோழி மர்மப் புன்னகையுடன் “இப்போ “அவளும்’ மாமியாராகி விட்டாள். இனிமேதான் தெரியும்” என்று கூறியதைக் கேட்டு திகைத்தேன்.

ஒரு தாய்க்கு தன் மகனின் திருமணத்தின் பொழுது ஒருவிதமான உணர்ச்சியும் தன்மகளின் திருமணத்தின் பொழுது வேறுவிதமான உணர்ச்சியும் ஏற்படுமா என்ன? அதென்ன மண மகனின் தாய் தான் மாமியாராகிறாளா? மணமகளின் தாயும் மாமியாராகிறாரே? நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு பெண்ணின் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு பொதுவான அர்த்தம் நிலவி வருவது உண்மை! ஆனால் மாமியார் என்று கூறும் பொழுது எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் “நல்ல பெயர்’ எடுப்பது மிகக் கடினம்.

ஒரு மாமியார் பாசத்துடனும், அன்புடனும் தன் மருமகளை நோக்கினால் “ஆரம்பத்தில் எல்லாம் இப்படி தான் இருக்கும். போகப்போகப் பார்க்கலாம்”

சற்றே ஒதுங்கி, அதிகம் பேசாமல் இருந்தால் – “எப்பவுமே இப்படிதான். ஒட்டி உறவாடுகிற ரகமே கிடையாது. பாவம் அந்த மருமகள்! எப்படிதான் சமாளிக்கப் போகிறாளோ!” வீட்டிற்கு வந்த மருமகளுக்கு நிறைய உரிமைகளைக் கொடுத்து முதலில் மகிழ்ச்சியாக இருந்து, பிறகு மனஸ்தாபங்கள் வந்தால் – எல்லாம் இது மாமியார் கொடுத்த இடம். முதலிலேயே ஒரு பிடி பிடித்திருந்தால் இந்த சின்னப் பெண் ஒழுங்காக இருந்திருப்பாள். பாவம் அந்தப் பையன்!” மாமியார் சிறிதே கடுமையாகப் பேசுபவளாக இருந்தால் “சரியான சீரியல் மாமியார்” என்கிற பட்டம் கிடைக்கும்.

ஒரு பெண் மருமகளாகி கணவன் வீட்டிற்கு வரும் பொழுது, எல்லோரையும் தன் அன்பினால் கவர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக் கிறார்கள். அதேபோல ஒரு மாமியாரும், முதல் முதலில் மாமியாராக ஆகும் பொழுது நம் மருமகளோடு சிநேகிதமாக, பாசத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் நினைக் கிறாள். ஆனால் மனித உறவுகளின் மிகையான குழப்பத்தினால் மாமியார் மருமகள் உறவு வெற்றியின் சதவிகிதம் குறைவுதான்! அந்தக் காலத்தில் ஒரு மாமியார் மாமியாராக மட்டுமே இருந்தாள். மிகப்பெரிய குடும்ப பாரமும், மிக அதிகமான உறவுகள் உடைய குடும்பத்து தலைவியுமான அவளுக்கு உட்கார்ந்து பேசக்கூட நேரம் கிடையாது. எப்பொழுதும் வேலைப் பளுதான். இழைந்து பேசவும், கொஞ்சவும் கூட நேரம் இல்லாதவள் அவள். “முடியாது’ என்று கூறினால் முடியாதுதான். முடியும் என்றால் “முடியும்’ தான். யாரும் மறுபேச்சு பேசமாட்டார்கள்.

அப்படி திட்டவட்டமாகப் பேச அவளுக்கு எந்த பயமும் இல்லை, நாளைக்கு நம்மை மருமகள் ஒதுக்கிவிடுவாளோ என்கிற பயமும் அவளுக்கு இல்லை. ஏனென்றால் அவளைச் சுற்றி உறவினர்கள் இருந்தார்கள். வயதான காலத்தில் தாங்கும் தூண்களாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை உண்டு. அதனால் “இந்த மருமகளைப் பிடிக்க வில்லை. ஆனால் பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும். நாளை அவள் நம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்கிற நிர்பந்தம் இல்லை. அந்தக் காலத்து மாமியாரின் கட்டளை களை “தங்கள் சித்தம் என் பாக்கியம்’ என்று மருமகள் சிரமேற் கொண்டு செய்வாள். சிறிய பெண்ணான மருமகள் வீட்டுக் காரியங்களை மெதுவாகக் கற்றுக் கொள்வாள். வீட்டு நிர்வாகத்தை மாமியார் செய்வதில், மருமகள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல், நிதானமாக வீட்டு வேலைகளை மாமியாரிடம் கற்றுக் கொண்ட காலம் அது. ஒரு மருமகனின் மாமியாருக்கும் அந்தக் காலத்தில் புத்திக் கூர்மை அதிகம். புதிதாக வந்திருக்கும் மாப்பிள்ளையை கதவுகளின் இடுக்கிலிருந்து நோட்டம் விடுவாள். மாப்பிள்ளையோடு ஒருவார்த்தை பேசாமலேயே அவனுடைய நல்ல குணங்கள், அல்லாதவை இவ்விரண்டையும் தன் பெண்ணிற்கு அழகாக சொல்லித் தரும் திறமைசாலி.

இப்படிப்பட்ட அந்தக் காலத்து அணுகுமுறைகள் வாழையடி வாழையாக வந்தவை. இதனால் திருமணங்கள் இரும்புச் சங்கிலியால் பிணைத் தது போல கோர்ட், விவாகரத்து என்கிற பேச்சுகளுக்கு இடமில்லாமல் இருந்தன.

இன்று நம் வாழ்வுமுறை…? பாஸ்ட்ஃபுட் எனும் அவசர உணவை உண்ணும் இளைய தலைமுறை, உறவுமுறைகளிலும் அதே அவசரத்தைக் கடை பிடிக்கிறார்கள். நிதானமாகப் பேசுவது, ஒருவரை யொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது, ஒருவரின் நிறை குறை களை அறிய முற்படுவது, அந்தக் குறைகளை சுலபமாக ஏற்றுக் கொள்வது போன்ற வாழ்க்கைமுறை போயே போச்! இன்றைய புதுமைப்பெண், நன்றாகப் படித்து, ஆணுக்கு நிகராக சம்பாதிக்கும் பொழுது, திருமணம் முடிந்து மாமியார் வீட்டில் அடி வைக்கும் பொழுது “நாமிருவரும் சரி நிகர்’ என்கிற எண்ணம் அவளிடம் வந்து விடுகிறது. எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, யாருக்கும் அடிமையாக இருக்க அவள் விருப்பப் படவில்லை. “மாமியார் வீட்டிற்கு வந்து விட்டோ ம் என்பதற்காக எதற்காக மாற்றிக் கொள்ள வேண்டும்? எப்பொழுதும் இருப்பது போல இருக்க வேண் டும் அவ்வளவுதான்’ என்று வாதிடுகிறாள்.

புது மருமகள், தன் மாமியார் மாமனாரை “அம்மா அப்பா’ என்ற ழைப்பது கேட்க நன்றா கத்தான் உள்ளது. ஆனால் அழைப்பது வேறு, மனதால் அப்படி நினைப்பது வேறல்லவா? “அம்மா’ என்று அழைத்தவுடன் தான் அந்த புதுப் பெண்ணின் “அம்மா’ ஸ்தானத்திற்கு வந்து விட்டோ ம் என்கிற எண்ணம் இன் றைய மாமியார்களிடம் அதிகமாக உள்ளது. அதே சமயம் பிறந்த வீட்டை விட்டு, புதிதாக முளைத்த திடீர் சொந்தங்களை நம்பி வரும் மருமகளும், தன் மாமியார்தான் இனி தன் அம்மா, மாமனார்தான் அப்பா என்கிற எண்ணம் கொள்கிறாள்.

இங்கு மிக முக்கியமான உறவான மகன்/கணவன் என்கிற ஒரு மனிதனை திருமணமான சில மாதங்களுக்கு இரண்டு பெண்களுமே மறந்து விடுகிறார்கள்.

பாவம் மகன், தன் பங்கிற்கு “அப்பாடா! மனைவிக்கும், தன் தாய்க்கும் இடையில் ஏதும் பிரச்னை யில்லை’ என்ற மகிழ்ச்சியுடன் உலா வருகிறான். திடீரென்று ஒருநாள் ஒரு சிறு விஷயத்திற்காக குடும்பத்தில் முதல் முறையாக ஒரு சலசலப்பு! தன் மகனுக்கு செய்யத் தவறிய கடமையை மருமகளிடம் சுட்டிக் காட்டுகிறாள் மாமியார். தன்னை “அம்மா’ என்றழைக்கும் மருமகளிடம் தாயார் ஸ்தானத்து உரிமையுடன் “இந்த வீட்டுல இப்படிதான் நடக்கணும்” என்று கூறுகிறாள். இந்தக் காலத்து மருமகள் பதில் கூறுகிறாள். “எனக்குத் தெரியும். என் இஷ்டப் படிதான் செய்வேன். நீங்க தலையிடாதீங்க.” இந்த பதிலைக் கேட்டுத் திகைக்கும் மாமியார், தன் பெண்ணிடம் பேசுவதுபோல் பேசுகிறாள். “நான் சொல்கிறபடி செய்” என்கிறாள்.

ஆனால் மருமகளின் கோபம் இருவருக்கு மிடையே சண்டையை மூட்டுகிறது. உடனே தன் மகனிடம் கூறி திருத்த முயலுகிறாள் “அம்மா’ என்றழைக்கப்பட்ட மாமியார்! உடனே மருமகள் தன் பங்கிற்கு “நான் உங்கள் மனைவி எனக்கு இந்த வீட்டில் உரிமை யில்லையா’ என்று கேட்க முதல் முதலாக அந்த ஆண்பிள்ளை திணறுகிறான்.

“என்னையும் உங்களையும் பிரிக்கத்தான் இந்த சதி” என்று குற்றம் சாட்டும் மனைவி… “என்ன அநியாயம்? அதற்காகவா மண முடித்தேன். நீ வேண்டும்; ஆனால் உன்னைப் பெற்ற தாய் வேண்டாமா?” என்று பொங்கி எழும் அம்மா…

அந்தோ பரிதாபம்! மற்றுமொரு “வீட்டு இராமாயணம்’ ஆரம்பமாகிறது.

மருமகள் உடனே தன் பிறந்த வீட்டிற்கு ஓடுகிறாள். தன் “சொந்த அம்மாவிடம்’ எல்லாவற்றையும் கூறி அழுகிறாள். இந்த நிலைமையை மூன்று விதமாகக் கையாள வேண்டிய நிர்பந்தத்தில் அந்தத் தாய் தள்ளப் படுகிறாள்.

1. “இது ரொம்ப சாதாரணமாக, எல்லோர் வீட்டிலும் நடைபெறும் ஒரு விஷயம். நானும் இதையெல்லாம் தாண்டி வந்தவள்தான். அவர்கள் சொல்படி நடந்துகொள்” என்று கூறுகிறாள். உடனே “நீ அந்தக் காலம், என்னால் அப்படி அடங்கிப் போக முடியாது” என்று மகள் கூறிவிடுகிறாள்.

2. “தனிக்குடித்தனம்தான் இதற்கு வழி” என்று பெண் திட்டவட்டமாகக் கூறுவதைக் கண்டு திகைக்கிறாள். மாப்பிள்ளையும் தன் பங்கிற்கு “ஆமாம் தனிக் குடித்தனம்தான். ஆனால் எனக்கு இஷ்டமில்லை. அவள் கட்டாயப் படுத்துகிறாள். அதனால் போகிறேன்” என்று பூடகமாக தன் “தனிக் குடித்தனம்’ ஆசையைத் தெரிவிக்கிறான்.

இது சரியான தீர்வல்ல என்று தெரிந்தும், அவள் பேச்சை யாரும் மதிக்காததால், பெண்ணைப் பெற்ற தாய் செய்வதறியாமல் திகைக்கிறாள். கடைசியாக “தனிக் குடித்தனம்’ பழி தன் மேல்தான் விழும் என்று அவள் நன்கு அறிவாள்.

3. மூன்றாவதாக மிகக் கடினமான முறை ஒன்றுள்ளது. அதாவது ஒரு மாமியார் தன் மாப்பிள்ளையிடம் பெண்ணின் “பிரச்னை யைப் பற்றிப் பேசுவது, தன் மகளிடம் தவறு ஏதுமில்லை என்றால் பேசிவிடலாம். ஆனால் இந்தக் காலத்துப் பெண்ணான தன் மகளைப் பற்றி நன்கறிந்த தாய், மாப்பிள்ளையிடம் பேசத் தயங்குகிறாள்.

மீறிப் பேசினால் மாப்பிள்ளை கூறும் “குறைகளைக் கேட்டு பதில் கூற முடியாமல் திணறுகிறாள். “நேரங்கழித்து எழுகிறாள், வீட்டு வேலைகளைச் செய்வதில்லை, வீட்டில் பெரியவர்களை அவ்வளவாக மதிப்ப தில்லை, தொலைபேசியில் அதிக நேரம் பேசுகிறாள், கம்ப்யூட்டர் முன்பு தவம் கிடக்கிறாள்’ என்கிற குற்றச்சாட்டுகள் தொடர் கதையாக வருகின்றன. புது மனைவி மீது குற்றப்பத்திரிகை படிக்கத் துவங்குகிறான் மாப்பிள்ளை. “பெண் ணைப் பெற்ற தாயாரிடமே கூறி விட்டோ ம். இனி எந்தக் கவலையு மில்லை’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கிளம்புகிறான். சில நாட்களிலேயே பெரிய மாற்றங்களை எதிர்பார்த்துக் கிடக் கிறான் புதுக்கணவன். புதுமனைவி எப்பொழுதும் போல இருப்பதைக் கண்டு திகைக்கிறான். “செவிடன் காதில் ஊதிய சங்காக’ இருப்பதைக் கண்டு கொதித்துப் போகிறான். மனைவியின் இந்த அலட்சியப் போக் கிற்கு அவளுடைய பெற்றோர்தான் காரணம் என்று தீர்மானம் செய்கிறான்.

புது மணப் பெண்ணோ தன் பங்கிற்கு, கணவன் இப்படிக் குறை கூறுவதற்கு அவனுடைய பெற்றோர் தான் காரணம் என்று தீர்மானம் செய்கிறாள். இருதரப்பு மாமியார்களும் மறைமுகமாக ஒருவரையொருவர் குறைகூறத் தொடங்குகின்றனர். தம்பதிகள் இருவருக்குள்ளும் “உன் அம்மாவும் என் அம்மாவும்’ என்கிற நிழல் யுத்தம் தொடங்க ஆரம்பிக்கிறது.

இருதரப்பு பெற்றோர்களின் எந்தத் தவறுமேயில்லாமல் ஒருவ ருக்கு எதிராக ஒருவர் செயல்படத் தொடங்குகின்றனர். இப்படிப்பட்ட நிலைமை வராமல் ஏன் தடுக்கக்கூடாது என்று யோசித்த பொழுது தோன்றியது “நல்ல மாமியாராக இருப்பது எப்படி’ என்கிற எண்ணம்.

பையனைப் பெற்ற தாய்: மருமகள் ஒரு இளவயதுப் பெண். “வீடு’ என்கிற “மிகப் பெரிய ஆபீஸை’ நிர்வகிக்கும் பொறுப்பு என்பதை அரிச்சுவடியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவள் என்று புரிந்து கொள்ள வேண்டும். சீரியல்தனமாக “மருமகள் எனக்கு மகள்’ என்பதெல்லாம் சிறிது ஒதுக்கிவிட்டு, முதலில் அவள் தன் மகனின் மனைவி என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

மகன் “ஒழுங்காக என் துணிமணியெல்லாம் துவைச்சு, இஸ்த்திரி பண்ணி எடுத்து வைக்கிறதேயில்லை. எனக்கு ஆபீஸ் போகும் பொழுது ஒரே அவஸ்தை” என்று தன் தாயாரிடம் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். உடனே அந்தத் தாய் தன் பங்கிற்கு மரு மகளைக் குறையும் கூறாமல், அதே சமயம் “ஐயோ பாவம் அவள் என்னடா செய்ய முடியும்? ஆபீசுக்குப் போய் வரவே நேரம் சரியாக இருக்கு” என்றும் கூறாமல், இந்த விஷயத்தை இந்தக் காதில் கேட்டு அந்தக் காது வழியாக விட்டு விடலாம். அது முடியவில்லை என்றால், “உன் மனைவிதானே. நீ நிதானமாகக் கூறினால் அவள் கேட்டு அதன்படி நடப்பாள்” என்று கூற லாமே! எப்பொழுதாவது அல்லது எப்பொழுதுமே வீட்டு வேலைகளில் தன் மகன் பங்கு கொண்டால், உடனே வரிந்து கட்டிக் கொண்டு மருமகளைச் சாட வேண்டாமே! அவன் மனைவிக்கு அவன் உதவி செய்வதில் என்ன தவறு உள்ளது என்கிற எண்ணம் கட்டாயமாக வேண்டும். அதே சமயம் உங்கள் மருமகள், தன் கணவனைப் பற்றி, அதா வது உங்கள் மகனைப் பற்றி ஏதாவது குறை கூறி னால், உடனே அவளு டன் சேர்ந்து கொண்டு அவனைப் புகழ்வதோ அல்லது திட்டுவதோ கூடாது. இது உங்கள் மருமகளிடம் உங்களுக்கு “நல்ல பெயர்’ வாங்கிக் கொடுத்தாலும், உங்கள் மகனின் நிலைமையை தர்மசங்கடமாக்குகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; அந்தப் பெண் தன் கணவனைப் பற்றிக் கூறுகிறாள். அவன் உங்கள் மகன்தான்… ஆனால் இப்பொழுது அவளின் கணவ னல்லவா? தன் மகனை எந்தக் காரணம் கொண்டும் அவன் மனைவி அல்லது மனைவிவழி சொந்தக்காரர்கள் முன்பு ஏசுவதோ அல்லது புகழ்வதோ கூடாது. மகன் வளர்ந்து இன்று சம்பாதிக்கிறான். மனைவி என்று ஒருத்தி வந்து விட்டாள். நாளை “தகப்பன்’ பட்டம் பெறக் கூடியவன் என்கிற எண்ணம் கொண்டு அதற்குரிய மரியாதையுடன் அவனிடம் பழகக் கற்றுக் கொள்ளுங்கள்.

இந்த அணுகுமுறை, அவனுக்கு நிறைய தைரியத்தையும், நாளை மனைவியுடன் பிரச்னை என்று வந்தால் அதை சமாளிக்கும் திறனையும் கொடுக்கும்.

பெண்ணின்தாய்: திருமணமான புதிதில் மட்டுமல்ல; எத்தனை வருடங்களானாலும் மகள் தன் தாயிடம் தன் கணவனைப் பற்றிய குறைகளைக் கூறினால், உன்னிப்பாகக் கேட்டு அதை மூன்று விதமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

1. பெண் யாரிடமாவது “புலம்ப’ வேண்டும், மனதில் உள்ளதைக் கொட்ட வேண்டும் என்று நினைக்கிறாள்.

2. அந்தக் குறை அல்லது சண்டையை சமயோசிதமாகத் தீர்த்து விட்டாள். அதைப் பற்றி தன் தாயிடம் கூற வேண்டும் என்று நினைக்கிறாள்.

3. குடிகாரக் கணவன், போதை வஸ்து என்கிற கோரப் பிடியில் இருக்கும் கணவன், பெண்களின் பின்னால் அலைபவன், சம்பாதிப்பதை விட அதிகம் செலவு செய்து அதனால் கடனாளியானவன் என்கிற கஷ்டத்தை தாயிடம் கூறுகிறாள்.

இந்த மூன்றாவது குறை இருந்தால் இது சாதாரண விஷயமல்ல என்பதைப் புரிந்து, அதற்குரிய மனத்தத்துவ மருத்து வரை நாடி அதைத் தீர்க்க முயல வேண்டும்.

மேற்கூறிய முதல் இரண்டு குறைகளாக இருந்தால் “நம்மிடம்தான் நம் குழந்தை கூற முடியும். வேறு யாரிடமாவது கூற முடியுமா?’ என்று புரிந்து நடக்க வேண்டும். உடனே “இத்தனை நடந்திருக்கு, உன் மாமியார் என்ன செய்து கொண்டிருந்தார்? பிள்ளையை வளர்த்த முறையே சரியில்லை” என்று “எரிகிற தீயில் எண்ணை வார்க்க வேண்டாம்.’ மகளைத் திருமணம் செய்து அனுப்பி விட்டோ ம், அதனால் நம் பொறுப்பு தீர்ந்தது என்று தட்டிக் கழிக்க நினைக்க வேண்டாம். அறிவுரையைக் கூறுவதுகூட, சமயம் பார்த்து, அது ஏற்கும் முறையில் கூறப் பயிற்சி பெறுவது பெற்றோர்களின் கடமை.

யுத்த பூமியில் அர்ஜுனன் “இப்படிப்பட்ட நிலைமை எனக்கு வந்து விட்டதே” என்று ஸ்ரீகிருஷ்ணரிடம் வெகுநேரம் புலம்புகிறான். கிருஷ்ண பகவான் பொறுமையாகக் கேட்கிறார். திடீரென்று அர்ஜுனன் “இதென்ன க்ருஷ்ணா, நான் பாட்டுக்கு புலம்பிக் கொண்டேதான் இருக்கிறேன். அறிவுரை ஏதும் கூறாமல் சும்மா இருக்கிறாய்” என்று பரிதாபமாகக் கேட்கிறான். “நீ புலம்பிக் கொண்டேதான் இருக்கிறாய். அறிவுரை ஏதும் என்னைக் கேட்கவில்லை. கேட்காதவர்களுக்கு அறிவுரை நான் எப்பொழுதும் கூறுவதில்லை” என்று ஸ்ரீக்ருஷ்ணர் சிரித்துக் கொண்டே கூறினார். இது இந்தக் காலத்துப் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பாடமாகும். சம்பந்திகளின் உறவில் உணர்ச்சிபூர்வமான அணுகுமுறையைவிட அறிவுபூர்வமான அணுகுமுறை மிகவும் முக்கியமாகும். கோடிக்கணக்கான பெண்கள் இப்படி எல்லா வகை உறவு முறைகளின் காலகட்டத்தைத் தாண்டி வருகிறார்கள். சில பெண்கள் வாழ்க்கையெனும் இந்த மேடையில் நல்ல பெயர் எடுத்து மகிழ்ச்சியோடு வாழ்கின்றனர். பல பெண்கள் இதில் சரியாக நடந்து கொள்ள முடியாமலோ அல்லது தெரியாமலோ அவதிப்படுகின்றனர்.

ஆனால் ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் இப்படிப்பட்ட ஒவ்வொரு நிலைமையிலும், ஒவ்வொரு பாத்திரத்திலும் எத்தனையோ இடர்களைத் தாண்டி, தன்னலம் கருதாமல் உழைத்து, மனதில் அன்பும், உறவினர்களை அரவணைத்தும், உலக நாடுகளில் இந்தியப் பெண்களுக்கு என்று ஒரு பெருமையைச் சேர்க்கிறார்கள்.

{jcomments on}

Leave a Reply