நலன்களை அருளும் நவகிரக விநாயகர்

விழாக்கள் விசேஷங்கள்

அமுதத்தால் அமரர் ஆகலாம். “அம்ருதபுரி’யும் நரர்களை, நாராயணன் திருவடியில் சேர்க்க வல்லது.

சென்னை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, படாளம் கூட்ரோடு- வேடந்தாங்கல் நெடுஞ்சாலையில், மூசிவாக்கம் மின்வாரிய நிலையத்தில் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீராமானுஜ யோக வனம். படாளம் கூட்ரோடில் இருந்து அரசுப் பேருந்து, ஆட்டோ போன்றவைகளின் மூலம் இங்கு வர முடியும்.

ஸ்ரீராமானுஜர் என்கிற வைணவ மகான் தங்கி, யோக நிலையில் இருந்து வழிபட்ட காரணத்தால் இவ்விடம், “ஸ்ரீராமானுஜ யோகவனம்’ எனப் பிற்காலத்தில் அழைக்கப்படலாயிற்று என்றொரு கருத்து உள்ளது.

இங்கு ஸ்ரீசீனிவாச பெருமாள், மதுரவல்லி தாயார், ஸ்ரீ நவகிரக விநாயகர், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீஆண்டாள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இவை யாவும் வேதாந்த ஆகம முறையில் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் மகாசம்ப்ரோக்ஷணம் கண்டவை.

ஸ்ரீநவகிரக விநாயகர்

இத்தலத்தில் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான், “ஸ்ரீநவ கிரக விநாயகராக’ வீற்றிருந்து, தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மனித வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளையும், சோதனைகளையும், சாதனைகளையும் தந்து ஆட்டிப் படைப்பவை நவகிரகங்களே!

நவகிரகங்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள், தெய்வ பலத்தால் மட்டுமே துன்பங்களிலிருந்து விடுபட முடியும். இந்த உண்மையை உணர்த்தும் விதத்தில் ஸ்ரீநவகிரக விநாயகர் அருளாட்சி புரிகின்றார்.

சுமார் 8 அடி உயரமுள்ள ஒரே கல்லில் இந்த விநாயகப் பெருமான் திருவுருவம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் திருவுடலில் பல்வேறு இடங்களில் இடம் பெற்றுள்ள நவகிரகங்களை இனி காண்போம்.

விநாயகர் திருவுருவின் நெற்றிப் பகுதியைப் பீடமாகக் கொண்டு சூரிய பகவான் காட்சி அளிக்கிறார்.

விநாயக பெருமானின் வயிற்றுப் பகுதியில் சந்திர பகவான் வீற்றிருக்கிறார்.

கணபதியின் வலது மேல் கையில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். வலது அபய ஹஸ்தத்தில் புதன் தரிசனம் தருகிறார்.

ஆனை முகத்தானின் வலது காலில் அங்காரகன் வீற்றிருக்கிறார். விநாயக பகவானின் இடது மேல் கையில் ராகு உள்ளார். கஜமுக தெய்வத்தின் இடது கீழ் கையில் சுக்ர பகவான் உள்ளார்.

நவகிரக விநாயகரின் தலைப் பகுதியில் குரு பகவான் உள்ளார். நவகிரக விநாயகரின் இடது காலில் கேது பகவான் காட்சி தருகின்றார்.

இவ்வாறு, தன்னை வணங்குபவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் விலகும் என்று உணர்த்தி, தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு நல்லருளை வாரி வழங்குகின்ற ஞான பகவனாக “நவகிரக விநாயகர்’ திகழ்கிறார்.

சங்கட சதுர்த்தி தினங்களில் இந்த விநாயக பெருமானுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, அருகம்புல் மாலை அணிவித்து வணங்குதல் விசேஷம்.

யோக நரசிம்மர்

நவகிரக விநாயகருக்கு பின்புறம் ஸ்ரீ யோக நரசிம்மர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தன் பிரகலாதனுக்காக நரசிங்க அவதாரம் எடுத்தவர் திருமால். பிரகலாதனின் தந்தையாக இருந்தும், வேத நெறிக்குப் புறம்பாக ஸ்ரீ ஹரியை நிந்தித்த காரணத்தால் அவனை வதம் செய்தவர் அழகிய சிங்கர். கணபதியையும், நரசிம்ம மூர்த்தியையும் ஒரு சேரத் தொழுவார்க்குக் கவலைகள் ஏது?

அம்ருதபுரி வாசன்

இங்கு “அம்ருதபுரி வாசன்’ என அழைக்கப்படுகின்ற ஸ்ரீநிவாசப் பெருமான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருப்பதி வெங்கடேசப் பெருமாளை போன்று, அதே அலங்காரக் கோலத்துடன் இவர் காட்சி அளிக்கிறார்.

மதுரவல்லி தாயார்

இங்கு மதுரவல்லி தாயார் என அழைக்கப்படுகின்ற “அலர்மேல் மங்கை தாயார்’ சந்நிதி தனியே உள்ளது. ஸ்ரீநிவாசப்பெருமாள் சந்நிதிக்கு மிக அருகில் மதுரவல்லி தாயார் கருவறை இருக்கின்றது. இங்கு தமிழ் வருடத்தில் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

திருவிழாக்கள்

இங்கு நடைபெறுகின்ற திருவிழாக்களில் முக்கியமானது சிரவண தீப விழா. ஒவ்வொரு மாதமும் திருவோணம் நட்சத்திரம் அன்று, ஆலயத்தில் “சிரவண தீபம்’ ஏற்றப்படுகிறது.

அன்று காலை ஸ்ரீநிவாசப் பெருமாள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங் களுக்கும்  அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

சிரவண தீப தரிசனத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

கோயில் நடை திறப்பு நேரம்

தினமும் காலை 7 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் ஆகியவற்றுடன் கோயில் நடை திறக்கப்படுகிறது. பிறகு பகல் 1 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் திறந்திருக்கும். அனைவரும் வருக!

 

https://www.dinamani.com/edition/Story.aspx?artid=323653

Leave a Reply