பலம் தரும் பரிகாரத் தலம் : சிறுவரம்பேடு / சிறுவாபுரி / சின்னம்பேடு- ஸ்ரீஊரக வரதராஜ பெருமாள் திருக்கோயில்

விழாக்கள் விசேஷங்கள்

தாயார் சந்நிதி, அருகில் சக்கரத்தாழ்வார், ஆண்டாள் சந்நிதிகளை தரிசித்துவிட்டுப் பார்த்தால், பலிபீடம், கொடிமரம், கருடன் சந்நிதி. கிழக்கு நோக்கிய கொடிமரம்… புதுப்பித்துள்ளனர். ஊரக வரதராஜஸ்வாமி சந்நிதிக்கு உரியவையாம்! தொடர்ந்து வலம் வருகிறோம். பிரதான வாயிலுக்கு எதிரே உள்ள 16 கால் மண்டபம் வழியே வந்தால், தேவியருடன் அற்புத தரிசனம் தருகிறார் ஸ்ரீநிவாச பெருமாள். சந்நிதியின் வெளிப்புறம் ஸ்ரீசந்தான வேணுகோபாலர். ஒய்யாரமாகச் சாய்ந்தபடி, குழலூதும் இந்தக் கண்ணனைக் காணும்போது… நமக்குள்ளும் ஒலிக்கிறது வேணு கானம்!

அடுத்து ஸ்ரீலட்சுமிநாராயணரையும் வரதராஜ ஸ்வாமியையும் தனிச் சந்நிதிகளில் தரிசிக்கிறோம். வரதராஜஸ்வாமி, தேவியர் இருவருடன் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாதாம். வருடத்துக்கு ஒருமுறை சாம்பிராணித் தைலம் மட்டுமே! மூலவர் சுதைத் திருமேனி! உற்ஸவர் திருமேனிகள் கொள்ளை அழகுடன் திகழ்கின்றன. காளிங்கநர்த்தனரும் சுதர்ஸனாழ்வாரும் தனித்துத் தெரிகிறார்கள். தூண் சிற்பங்கள், பழைமையை பறைசாற்றுகின்றன. 11-ஆம் நூற்றாண்டுக் கோயிலாம். தல புராணம், அதனினும் பழைமையான சரிதத்தைக் கொண்டுள்ளது.
siruvarambedu siruvapuri temple3வடக்கே ஆரண்யநதி; தெற்கே குசஸ்தலை. நடுவில் ரம்மியமான சோலை. இங்கே குடில்களை அமைத்து தவ வேள்வி இயற்றினர் முனிவர்கள். அவர்களில் ஸூச்வாஸ முனிவரும் ஒருவர்.

ஒருநாள்… ஆரண்ய நதியில் நீராடி, காலை அனுஷ்டானங்களை முடித்து, குடிலுக்குத் திரும்பிய வர்களுக்கு அதிர்ச்சி! நந்தவனம் நாசமாகியிருந்தது. வேள்விச் சாலை எங்கும் ரத்த மாமிசங்கள்! அதிர்ச்சியில் உறைந்த ஸூச்வாஸர், தனது யோக திருஷ்டியால் இது தண்டகாரண்யத்தில் இருந்து வந்த சிரவணாசுரனின் வேலை என்பதை அறிந்து அதிர்ந்தார். படுபயங்கரமானவன் ஆயிற்றே!

என்ன செய்வது? மீண்டும் தவச் சாலையை ஏற்படுத்தி அக்னிஷ்டோம யாகத்தைத் தொடங் கினார். அப்போது, பலத்த காற்றுடன் மண்மாரி பெய்தது… பெருத்த உடலுடன், கோரைப் பற்களைக் காட்டி, தீச்சுடரைக் கக்கியபடி வந்தான் சிரவணாசுரன். இளம் முனிவர்கள் பயத்தில் அலறி ஓடினர். அப்போது, அந்த முனிவர்களில் தலைவராக இருந்த ரிஷி மணிகர், கோபாவேசம் பொங்க ஹூங்காரம் செய்தபடியே முன் நின்றார். அவரின் கோலத்தைக் கண்ட சிரவணாசுரன் பயந்து பின்வாங்கினான்.
siruvarambedu siruvapuri temple1நாட்கள் சென்றன. ஒருநாள்… ஸூச்வாஸர் பிருந்தாரண்யத்தில் இருந்த கண்வ ரிஷியிடம், சிரவணாசுரனைப் பற்றிச் சொன்னார். உடனே கண்வர், தான் நைமிசாரண்யத்தில் காச்யப முனிவரிடம் பெற்ற உபதேசத்தை ஸூச்வாஸருக்கு உபதேசித்தார். ஸ்ரீமந் நாராயணனை விக்ரக ரூபத்தில் வழிபடுமாறு பணித்தார்.

அதன்படி, தனது ஆஸ்ரமத்தில் யாகசாலை அமைத்தார் ஸூச்வாஸர். மணிக முனிவர் தன்னுடைய பத்தினி சந்தியாதேவியுடன் மேற்கு வாயிலைக் காத்தார். ஸூச்வாஸர் கிழக்கு வாசலில் அமர்ந்து, ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து தவம் செய்தார். காலம் சென்றது. அவருடைய நாபி வரையில் மண் மூடியது. அதிலிருந்து தர்ப்பைப் புல் முளைத்தது. அதனால் இவருக்கு ‘குசநாபர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

குசநாபரின் தவத்துக்கு இணங்க, ஸ்ரீமந் நாராய ணனின் அருளால் விஸ்வகர்மா தோன்றி ஒரு சிலையை வடித்துக் கொடுக்க முனைந்தார். அப்போது ஸ்ரீபூமிப்பிராட்டி சகிதராக, சங்கு- சக்ர கடிக அபய கரங்களுடன் ஸ்ரீதேவாதி ராஜராக பெருமாள் காட்சி அளித்தார். அந்த வரதராஜ ஸ்வாமியை பலவாறு போற்றித் துதித்த குசநாபர், மணிக முனிவர் உள்ளிட்ட எல்லோருக்கும் அருள் வழங்கினார். அங்கே வரதராஜருக்கு சந்நிதி எழுந்தது. விஸ்வகர்மாவின் கைவண் ணத்தில் ஆஸ்ரமம் ஆலயமானது!
siruvarambedu siruvapuri temple7மீண்டும் அங்கே யாகங்கள் தொடர ஏற்பாடாயின. அதை அறிந்த சிரவணா சுரன், சக அசுரர்களுடன் இவர்களைத் தாக்க வந்தான். குசநாபர் உள்ளிட்டோர், தங்களைக் காக்குமாறு பெருமாளிடம் சரணாகதி செய்தனர். அடுத்த நொடி, சுதர்ஸனச் சக்கரத்தில் இருந்து கிளம்பிய ஜ்வாலை, சிரவணாசுரன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்து மீண்டது. முனிவர்கள் பெருமாளை போற்றிக் கொண்டாடி, யாகங்களைத் தொடர்ந்தனர்.

ஸ்ரீராமனின் புத்திரர்களான குசன்-லவனுடன் நாடு முழுதும் யாத்திரை செய்தார் வால்மீகி. ஒரு சித்ரா பௌர்ணமியன்று, இந்த அரண்ய நதிக்கரையில் அவர்கள் பர்ணசாலை அமைத்துத் தங்கினர்.

அன்று நித்திய கர்மாக்களைச் செய்ய, லவனும் குசனும் நதியில் மூழ்கினர். நதியின் நடுவில், ஆதிசேஷன் குடைபிடிக்க சங்கு-சக்ரதாரியாக காட்சி தரும் தேவாதிராஜரை,

முனிவர் ஒருவர் பூஜிப்பதைக் கண்டனர். ஆச்சரியம் மேலிட, இதை வால்மீகியிடம் தெரிவித்தனர். அவர் ஞான திருஷ்டியால், அருகில் ஸ்ரீவரதராஜ பெருமாளை வணங்கி வரும் குசநாப முனிவரைக் கண்டார். பின்னர், குசநாபர் ஆஸ்ரமத்துக்கு மூவரும் சென்றனர். அங்கே பெருமாளைக் கண்டு, ஸ்ரீராமாயண ஸ்லோகங்களால் போற்றினர். அந்த ஆஸ்ரமமே ராமாயண பாராயண ஸ்தலமாயிற்று.
siruvarambedu siruvapuri perumal3ஒருநாள், வால்மீகி முனிவரின் கனவில் தோன்றிய பகவான், குச-லவருக்கு வில்வித்தை கற்றுத் தரும்படி கூற, அவர்களுக்கு அங்கேயே வில்வித்தை முதலான அனைத்துக் கல்வியும் வால்மீகி முனிவரால் அளிக்கப்பட்டது. சிறுவரான லவனும் குசனும் அம்பு எடுத்து பயிற்சி செய்த இடம் ஆதலால், ‘சிறுவர் அம்பு எடு’ எனப்பட்டது. பின்னாளில் சிறுவரம்பேடு, சின்னம்பேடு என மருவியது.

அது- முற்காலப் பல்லவர் காலம்! இந்தக் கானகத்துக்கு நடுவே குடியிருப்புகள் தோன்றின. அங்கே அடிக்கடி கலகம், திடீர் திடீரென குடியிருப்புகள் தீக்கிரையாவது, மிகப் பெரிய குளவிப் படை பறந்து வந்து மனிதர்களையும் விலங்குகளையும் தாக்குவது என ஒரே களேபரம்தான்! பசியால் வாடிய மக்கள், ஒரு தபஸ்வியை சரணடைந்து, தங்களைக் காக்க வேண்டினர். அவரும் தேவராஜஸ்வாமியை வணங்கி தியானத்தில் ஆழ்ந்தார்.

தியானத்தில் ஒரு காட்சியைக் கண்டார். விஷ்ணுவின் மாயா சக்தியான வைஷ்ணவி தேவி, விந்திய மலையில் இருந்து இறங்கி பெருமாளின் சந்நிதியை அடைந்தாள். பெருமாளின் வலது கண்ணில் இருந்து தோன்றிய கோடி சூரியப் பிரகாச ஒளி, வைஷ்ணவி தேவியின் இதயத்தில் புகுந்தது. அவள், பெருமாளை நேராக தரிசித்தபடியே வண்டுகளாகத் திரிந்து நாசம் ஏற்படுத்திய சிராவண அரக்கர்களை தன் காலால் பூமிக்குள் அழுத்திக் கொன்றாள்.

பின், வைஷ்ணவியாக கோலம் கொண்டு அங்கே எழுந்தருளினாள். இதை யோகத்தில் கண்ட தபஸ்வி, அனைவரிடமும் இதுகுறித்து விவரித்து, பயத்தைப் போக்கினார். இங்கே கோயிலுக்கு பின்புறம், வரதராஜரை நோக்கி கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீவைஷ்ணவி.

வைகானச ஆகம பூஜை நடைபெறும் இந்தக் கோயில் தூண்களில் அனுமன் சிற்பங்கள் அதிகம். பல்லவர் காலக் கட்டடக் கலையை இவை பறைசாற்றுகின்றன!

லவ குசர்களுக்கும், மகரிஷிகளுக்கும் அபயம் அளித்த வரதராஜரை தரிசித்து, உள்ளன்போடு வணங்கினால் நமக்கும் அபயம் தரமாட்டானோ?!

குழந்தைக் கண்ணனுக்கு திருமஞ்சனம் செய்தால்
குழந்தைக் கண்ணன்குழந்தை பாக்கியம்!

குழலூதியபடி ஒய்யாரமாகக் காட்சிதரும் கண்ணபிரானுக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் திருமஞ்சனம் செய்வித்து, திருமஞ்சனப் பாலை தம்பதியர் அருந்தி வர வேண்டும். குழந்தை பிறந்த பிறகு, வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சார்த்த வேண்டும்.

கல்வியில் சிறக்க… பயம் தொலைய!

இங்கே குச-லவர்களுக்கு வால்மீகி முனிவர் சகல கலைகளையும் கற்றுத் தந்தார். ஆதலால், இங்கே வந்து பெருமாளை வணங்கி, விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொள்ள, கல்வியில் சிறப்பான நிலையை மாணவர்கள் அடைவார்களாம்!

இங்கே சுதர்ஸன பெருமாள் மிக விசேஷம். நல்லவர்களைக் காக்க நெருப்பாகப் புறப்பட்டு தீயவர்களை அழித்தவர் என்பதால், மனதினுள் தேவையற்ற பயம் இருப்பவர்கள், சுதர்ஸன பெருமாளை சனிக்கிழமைகளில் பூஜித்து வணங்க பயம் தொலையும். வரதராஜ பெருமாள் சந்நிதி விமானத்தில் குச-லவர்கள் அம்பெடுத்து நிற்க, சுதர்ஸனர் உக்கிர ரூபத்தில் காட்சிதர, குசநாப முனிவர் தொழுத கோலத்தில் இருக்கும் காட்சியை தரிசித்தாலே பாவம் தொலையும்; பயம் விலகும் என்கின்றனர்.

கட்டுரை / படங்கள்: செங்கோட்டை ஸ்ரீராம்


இங்குள்ள படங்கள் ஏதேனும் வழிபாட்டுக்காக பெரிய பிக்ஸல் அளவில் தேவைப்படுவோர் request@www.deivatamil.comil என்ற மெயிலில் தொடர்பு கொள்ளலாம். படம் இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.


சிறுவரம்பேடு ஊரக வரதராஜஸ்வாமி கோவில் :

siruvarambedu siruvapuri acharyassiruvarambedu siruvapuri perumal6

siruvarambedu siruvapuri sthambasiruvarambedu siruvapuri temple1siruvarambedu siruvapuri temple2siruvarambedu siruvapuri temple4siruvarambedu siruvapuri temple5siruvarambedu siruvapuri temple6siruvarambedu siruvapuri perumal1siruvarambedu siruvapuri perumal4siruvarambedu siruvapuri perumal2siruvarambedu siruvapuri perumal7siruvarambedu siruvapuri temple3siruvarambedu siruvapuri temple6siruvarambedu siruvapuri temple2siruvarambedu siruvapuri temple8

Leave a Reply