திருவரங்கம் / ஸ்ரீரங்கம்

விழாக்கள் விசேஷங்கள்

ஊருக்குள் இல்லை இந்தக் கோயில். மாறாக கோயிலுக்குள்தான் ஊரே இருக்கிறது. எங்கே என்கிறீர்களா? வேறேங்கே….ஸ்ரீரங்கத்தில்தான். ஸ்ரீ ரங்கநாதனுடைய திருக்கோயிலுக்கு 7 பிரகாரம். அதில் வெளியிலிருந்து முதல் 3 பிரகாரங்களில் மக்கள் வாசம். மீதி உள்ள 4 பிராகாரம் ஸ்ரீரங்கனின் வாசம். அதாவது அவனது திருக்கோயில்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், மிகப் புனிதமான காவிரி  மற்றும் கொள்ளிடத்துக்கு நடுவில் தீவுப் பகுதியில் அமைந்துள்ளது.

வைணவர்களுக்குப் பெரிய கோவில் என்பது இதுதான். 108 வைணவத் தலங்களில் முதன்மையாக விளங்கும்

இத்திருக்கோயிலின் விமானம் பிரம்ம தேவனின் தவத்தால் திருப்பாற்கடலினின்று வெளிப்பட்டுத் தோன்றியதாம். அதை பிரம்மதேவர் தேவருலகில் நெடுங்காலம் பூஜித்து வந்தார். ஸ்ரீ அரங்கநாதருக்கு தினமும் பூஜை செய்து வரும்படி பிரம்மதேவர் சூரியனை நியமித்தார்.

பின்னர், சூரிய குலத்தில் தோன்றிய மன்னன் இஷ்வாகு, இந்த விமானத்தைத் தனது தலைநகராகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு வந்தார். இக்குலத்தில் தோன்றிய திருமாலின் அவதாரமான ராமபிரான், தனது முடிசூட்டு விழாவைக் காண வந்த விபீஷணனுக்கு இந்த விமானத்தை பரிசாக அளித்து பூஜிக்கச் சொன்னார். இதை அவர் மிகுந்த பக்தியுடன் இலங்கைக்குக் கொண்டு சென்றார். காவிரியாற்றின் கரையை அடைந்த விபீஷணன் களைப்பின் காரணத்தால் விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினார்.

தன் நித்தியக் கடன்களை முடித்து விட்டு, மீண்டும் புறப்பட நினைத்தபோது விமானத்தை எடுக்க முயன்றும் அந்த விமானம் மேலே எடுக்க வரவில்லை. அவரால் பெயர்த்து எடுக்க முடியாத அளவுக்கு அந்த விமானம் அங்கேயே அழுந்திப் பதிந்து நிலைகொண்டு விட்டது.

இதனால் கவலை கொண்டு கதறிய விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆண்டு வந்த சோழன் தர்மவர்மா ஆறுதல் கூறினார். அப்போது அசரீரியாக காவிரிக் கரையிலேயே தான் தங்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார் அரங்கன். விபீஷணனுக்காக, “தென்திசை இலங்கை நோக்கி’ பள்ளி கொண்டருள்வதாக (அனந்த சயனத்தில் அருள் அளிப்பவராக ) உறுதி மொழிந்தார். அதனைக் கேட்ட விபீஷணன் ஒருவாறு மனம் தேறி அரங்கனை வழிபட்டான். அந்த விமானத்தைச் சுற்றிக் கோயில் எழுப்பி எல்லோரும் வழிபாட ஏற்பாடு செய்தார் சோழ மன்னர் தர்மவர்மா.

ஆனால், தர்மவர்மா கட்டிய கோயில் காவிரி வெள்ளப் பெருக்கில் அலையுண்டு மண்ணில் மறைந்தது. இந்த மன்னர் வழிவந்த கிள்ளிவளவன் என்னும் அரசன், ஒரு மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது, ஒரு கிளியானது “வைகுந்தத்திலுள்ள மகா விஷ்ணுவின் கோயிலாகிய ஸ்ரீரங்கம் இருந்த இடம் இதுதான், அக்கோயிலை இப்போதும் காணலாம்’ என்ற பொருள் தரும் புராணச் செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது.

மன்னரது கனவில் வந்த மகாவிஷ்ணு, தான் கோயில் கொண்டிருந்த பழைய கோயில் மறைந்திருந்த சரியான இடத்தைக் காட்டி அருளியதாகவும், அதைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட கருவறையைச் சுற்றி கோயிலை அந்த மன்னர் கட்டியதாகவும் வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் திருக்கோயிலில்தான் ஆண்டாள், திருப்பாணாழ்வார், பீபி நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *