திருவரங்கம் / ஸ்ரீரங்கம்

விழாக்கள் விசேஷங்கள்

கோயில் அமைப்பு: இத்திருக்கோயிலில் மூலவர் ஏழு திருச்சுற்றுகளுக்குள் கருவறையில் தென்திசை நோக்கி பள்ளி கொண்டுள்ளார். திருவுண்ணாழி திருச்சுற்று, ராஜமகேந்திரன் திருச்சுற்று, குலசேகரன் திருச்சுற்று, ஆலிநாடான் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று, திருவிக்கிரமன் திருச்சுற்று, கலியுகராமன் திருச்சுற்று என ஏழு திருச்சுற்றுகளையும் உள்ளடக்கி 156 ஏக்கர் பரப்பளவில் அடையவளந்தான் திருச்சுற்று அமைந்துள்ளது.

கோயிலுக்குத்  தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாமல் இருந்த தெற்கு ராஜகோபுரம் 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தாயார் அருள்மிகு அரங்க நாச்சியாருக்கு, சுவாமிக்கு நடைபெறுவது போல எல்லா திருவிழாக்களும் நடத்தப்படும். கோடைத் திருவிழா, வசந்த உற்ஸவம், நவராத்திரி உற்ஸவம்,  ஊஞ்சல் உற்ஸவம் உள்ளிட்ட திருவிழாக்கள் முக்கியமானவை.

ராமானுஜர் சன்னதி: பரமபதத்தில் ஸ்ரீமன் நாராயணன், ஆதிசேஷனை அழைத்து “200 ஆண்டுகள் பூலோகத்தில் வாழ்ந்து மேற்கூறியபடி செய்து வாரும்’ என்று ஆணையிட்டார். அதனால்தான் அவர் ராமானுஜராக அவதாரம் எடுத்தார்.

சுமார் 120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜர், தன்னுடைய திருமேனியை சன்னதி பிராகாரத்தில் அகளங்கன் திருச்சுற்றில் உள்ள மண்டபத்தில் வைத்து இறுதி கைங்கர்யங்கள் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டபடி நடந்தது. அதுவே தற்போது உடையவர் சன்னதியாக உள்ளது. ராமானுஜர் திருமேனியைப் பள்ளிப்படுத்திய பிறகு தானாகவே திருமேனி தோன்றியுள்ளது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி கருவறையாக உள்ளது. இந்தச் சன்னதி மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. அதற்குப் பதிலாக குங்குமப்பூவும், பச்சைக் கற்பூரமும் கலந்து திருமேனியில் ஆண்டில் ஐப்பசி மாதமும், சித்திரை மாதமும் சாற்றப்படும். இவ்வாறு எவ்வித ரசாயனக் கலப்பும் இன்றி இயற்கையான முறையில் குங்குமப்பூ மற்றும் பச்சைக் கற்பூரம் கொண்டு உடலை அழியாமல், சிதையாமல் இக்கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.

சக்கரத்தாழ்வார் சன்னதி: இந்தச் சன்னதியில் உள்ள பெருமாள் சுதர்சன ஆழ்வார் என்றழைக்கப்படுவார். எட்டுத் திருக்கைகள், சங்கு, சக்கரம் மற்றும் அங்குசங்களுடன் காட்சியளிக்கிறார். இங்கு மூலவர் பதினாறு திருக்கரங்களுடன் உள்ளார். மூலவராகிய சக்கரத்தாழ்வாரின் பின்புறம் யோக நரசிம்மனின் திருவுருவத்தைக் காணலாம். சனிக்கிழமை தவிர, மற்ற நாள்களில் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

கருடாழ்வார் சன்னதி: ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் திருச்சுற்று அல்லது ஆலிநாடன் திருச்சுற்று எனப் பெயர் பெற்ற நான்காவது திருச்சுற்றில், 14 அடி உயரத்தில் கருடாழ்வார் உள்ளார். கருவறைக்கு நேர் எதிரில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் பெருமாளுக்கு அஞ்சலி செலுத்தியவாறு உள்ளார்.

ஸ்தல விருட்சம்: இத்திருக்கோயில் ஸ்தல விருட்சமாக புன்னை மரமும் அமைந்துள்ளது. இந்த மரம் சந்திர புஷ்கரணி அருகிலேயே அமைந்துள்ளது.

ஸ்தல தீர்த்தம்: இத்திருக்கோயில் உள்ள தீர்த்தத்துக்கு சந்திர புஷ்கரணி என்று பெயர். இந்தத் தீர்த்தத்தைச் சுற்றி வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவ தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆடம்பர தீர்த்தம் என எட்டுத் தீர்த்தங்கள் விளங்குகின்றன. இது மட்டுமல்லாமல், தென்திருக்காவிரி, வடத் திருக்காவிரியும் உள்ளது.

இந்த சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில்தான் வருடம் முழுவதும் நடைபெறும் உற்ஸவங்களில் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருளி, அவருக்கு தீர்த்தவாரி நடைபெறும். பரமபதவாசலுக்கும்,  ஸ்ரீகோதண்டராமன் சன்னதிக்கும் இடையே இந்த சந்திரபுஷ்கரணியும், ஸ்தல விருட்சமான புன்னை மரமும் அமைந்துள்ளன.

Leave a Reply