திருவரங்கம் / ஸ்ரீரங்கம்

விழாக்கள் விசேஷங்கள்

திருவிழாக்கள்: அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். இவற்றில் வைகுண்ட ஏகாதசி, பங்குனி, சித்திரைத் தேரோட்டங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இதிலும், வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். இத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு பரமபதவாசல் திறப்பாகும். இத்திருவிழாவின் போதுதான் இந்த வாசல் 10 நாள்களுக்கு திறந்திருக்கும்.

சித்திரையில் கோடைத் திருவிழா, விருப்பன் திருநாள், வைகாசியில் விசாக உற்ஸவம் (தொடர்ந்து ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் கோடைத் திருவிழா, வசந்த உற்ஸவம்), ஆடி 18}ல் அம்மாமண்டபத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி காவிரித் தாய்க்குப் பூஜை செய்தல், புரட்டாசியில் நவராத்திரி உற்ஸவம், ஐப்பசியில் ஊஞ்சல் உற்ஸவம், கார்த்திகை, மார்கழி மாதங்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, தை மாதத்தில் பூபதித் திருநாள் என்றழைக்கப்படும் தேரோட்டம், தெப்பத் திருவிழா, பங்குனியில் ஆதி பிரமோற்ஸவம் என எல்லா மாதங்களிலும் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும்.

விசுவரூப தரிசனம்: இத்திருக்கோயில் யானை வடத் திருக்காவேரியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து கருவறை நோக்கியும், கோயில் காராம் பசு பின்புறம் திரும்பியும் நிற்கும் போது திரை விலகி பெருமாள் காட்சியளிக்கும் விசுவரூப தரிசனம் மிகவும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

ஸ்ரீரங்கம் கோயிலில் காலை 8 மணிக்கு ரங்கனுக்கு கோதுமை ரொட்டி, பச்சைப் பால், வெண்ணைய் பிரசாதம். இது ஸ்ரீரங்கனைத் தன் உயிராகப் பாவித்த துலுக்க நாச்சியார் அவனுக்குப் படைக்கும் திருவமுது. நாச்சியார் வடதேசமல்லவா? அதனால் ரொட்டியும், வெண்ணையும் பாலும் பிரசாதமாயிற்று.

9 மணிக்கு வெண்பொங்கல்,தோசை, கத்தரிக்காய், பூசணிக்காய் வாழைக்காய், கறியமுது. அதாவது பொரியல். எலுமிச்சங்காய் ஊறுகாய். சுக்குவெல்லம். பெருமாளுக்கு ஜீரணிக்க சுக்குவெல்லம் தருகிறார்களாம்.

உச்சிகாலத்தில் அந்தக் கோயிலின் அத்தனைப் பணியாளர்களுக்கும் பெரும்படியாக சுத்தான்னம், அதாவது வெள்ளைச் சாதம் தயாரிக்கப்படுகிறது. அவர்களுக்கான உணவான இது “பெரிய அவசரம்’ என்று அழைக்கப்படுகிறது. “அவசரம்’ என்ற சொல் சமையலைக் குறிக்கிறதாம். பெரிய அளவில் செய்யப்படுவதால் இது பெரிய அவசரம் ஆயிற்று என்கிறார்கள். இத்தோடு சாற்றமுது (ரசம்), திருக்கண்ணமுது (பாயசம்) பாசிப்பருப்பு, வாழைக்காய் கறியமுது. நெய், அதிரசம் முதலியனவும் பெரிய அவசரத்தில் அடங்கும்.

சாயங்காலம் ஆறு மணிக்கு க்ஷீரான்னம், அதாவது பால்சாதம்,வடை, அப்பம், தேன்குழல், கறியமுது, ஆகியவை அடங்கும்

இரவு 9 மணிக்கு ரங்கனுக்கு அர்த்தஜாமப் பூஜையும் அதை ஒட்டி அரவணை(இது சர்க்கரைப் பொங்கல் போன்றது)கறியமுது, அப்புறம் இதெல்லாம் ஆகி ரங்கன் பள்ளியறைக்குப் போகிற சமயத்தில் குங்குமப்பூ, ஏலம், நாட்டுச்சர்க்கரை சேர்ந்து சுண்டக் காய்ச்சிய பால் பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது.

அந்த நாளில் ராஜாக்கள் வரும் போது முன்னே கட்டியம் சொல்லும் பணியாளர் வந்து ராஜராஜ….ராஜாதி ராஜ என்று ஆரம்பித்து நீளமாக ராஜாவின் புகழைச் சொல்வதை சரித்திர சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். அவர்களெல்லாம் சாதாரண ராஜாக்கள். ரங்கனோ இந்தப் பிரபஞ்சத்தின் சக்ரவர்த்தியல்லவா….அவன் வீதி உலா வந்தால் எப்படிப்பட்ட கட்டியம் சொல்வார்கள் தெரியுமா? “”மன்னிய சீர் மணவாள மாமுனிவர் ஈடுகந்து பின்னோடு ஸ்ரீசைலேச… எனப்பேசும் அரங்கா…..எச்சரிக்கை” என்பார்கள் கட்டியம் சொல்லிகள்.

உடனே அரங்கனின் பல்லக்கைச் சுமப்பவர்கள் “நாயன்தே’ என்று பதிலளிப்பார்கள். நாயகன் நீ என பொருள்படும் வடமொழி வாசகம் இது என்கிறார்கள். பல்லக்கை சிம்மம் நடப்பது போலவும், அன்னம் நடப்பது போலவும் பல்வேறு கதிகளில் அசைத்து அசைத்து எடுத்துச் செல்வதைப் பார்த்தால் கம்பீரமாக இருக்கும்.

சிங்கம் குகையைவிட்டு வெளியே வருதல் போல கம்பீரமாக ரங்கன் திருவீதி உலா புறப்படும் போது தன் கோயில் வாசலில் இருந்து பார்க்கிறாள் ரங்கநாயகி. அப்போது வசதியாக உட்கார்ந்து பார்க்க ஒருக்களித்து உட்கார்ந்தபடி அவர் கையை ஊன்றி இருக்கும் இடத்தை 5 குழி 3 வாசல் என்கிறார்கள். ஐந்து விரல்களும் தரையில் அழுந்திய பள்ளம் தாயாரின் திருவடியை ஒட்டிக்காட்சித் தருகிறது.

Leave a Reply