சுசீந்திரம் திருக்கோயில்

ஆலய தரிசனம்

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ. தொலைவிலுள்ள சுசீந்திரத்தில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் ஒருங்கிணைந்த அம்சமாக (தாணு-மால்-அயன்) இக் கோயிலில் மூலவர் அருள்மிகு தாணுமாலயமூர்த்தி எழுந்தருளியுள்ளார். இந்திரன் சாப விமோசனம் பெற்றதால், இத் தலம் சுசீந்திரம் என்று பெயர் பெற்றதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மும்மூர்த்திகளையும் தனது கற்பின் திறத்தால், மழலைகளாக மாற்றி தாலாட்டிய கற்பின் கனல் சக்தி அனுசூயா வாழ்ந்த திருத்தலமாக சிறப்புப் பெற்றது சுசீந்திரம்.

பழையாற்றின் கரையில் திருக்குளத்துடன் கூடிய சுசீந்திரம் கோயிலின் 135 அடி உயர ராஜகோபுரம் இயற்கை எழில் சூழ விண்ணுயரக் காட்சி தருகிறது. இக் கோயிலின் முன்புள்ள நாடகசாலை மண்டபம் நடன மங்கையர் 8 பேரின் உபயத்தால் கட்டப்பட்டதாக கல்வெட்டு சான்றுரைக்கிறது.

சுசீந்திரத்தில் வாழ்ந்த இந்த நாட்டியத் தாரகைகளின் சிலைகள் இம்மண்டபத்தின் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. விஜயநகரப் பேரரசான கிருஷ்ணதேவராயரின் ஆட்சியில் விட்டலதேவராயர் என்ற குறுநில மன்னரால் இக் கோயிலின் நுழைவு வாயில் ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டுள்ளது.

கூரிய இரும்பு தூண்களுடன் பிரதான வாயில் கதவு 24 அடி உயரத்துக்குப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. வாயிலை அடுத்து அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் பிரம்மாண்டமாக கரும்பு வில்லுடன் மன்மதன், ரதி, மகாபாரத நாயகர்கள் கர்ணன், அர்ஜுனன் சிலைகள் உயிரோவியமாகக் காட்சியளிக்கின்றன.

கிழக்குப் பிரகாரத்தில், வசந்த மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளதால் இத்தலம் குருஸ்தலமாக விளங்குகிறது.

இதையடுத்து நடுவில் கொன்னடி சந்நிதி, கருடர், தத்ரூபமாக கல்லில் வடிக்கப்பட்டுள்ள நந்திதேவர் சந்நிதிகள் உள்ளன.

இக் கோயிலின் தலவிருட்சமான கொன்றை மரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.

மூலவர் சன்னதிக்குச் செல்லும் வழியில் கொடி மண்டபத்தில் 2 பிரமாண்டமான துவஜ ஸ்தம்பங்கள் உள்ளன. இதனருகே செண்பகராமன் மண்டபத்தில் ஆட்கொண்டான், உய்ய கொண்டான் எனப்படும் துவார பாலகர்கள், தவறு செய்வோர் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கும் வகையில் வாயிலைக் காக்கிறார்கள். இதனருகே இசைத்தூண்களும், பெண் வடிவில் விநாயகர் சிலை, தூங்கா மணி விளக்கு ஆகியவை உள்ளன.

இத் திருக்கோயிலில் மூலவரான தாணுமாலயமூர்த்தியை தினமும் அர்த்தசாமத்தில் இந்திரன் வழிபடுவதாக ஐதீகம். இதனால், கருவறையில் நுழையும் பூசாரிகள் “அகம் கண்டதை புறம்கூற மாட்டேன்’ என்று ரகசிய சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு இறைவனை அர்ச்சிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

திருக்கோயில் மூலவர் தங்கக் கவசம் பூண்டு, 27 நட்சத்திரங்கள் மின்னும் வகையில் ஏற்றப்பட்ட தீப ஒளியில் அருள்காட்சி தருவது பிறவிப் பிணியைத் தீர்க்க வல்லது.

மூலவர் சந்நிதி அருகே விண்ணவரம் பெருமாள் நவபாஷாணத்தால் வடிக்கப்பட்டு வெள்ளிக் கவசம் பூண்டு அருள்காட்சி தருகிறார். கல்விதானக் கூரையில் நவக்கிரகங்களுடன் 4 கால் மண்டபம் அமைந்துள்ளது. இதன் தூண்களில் நவகிரஹ பரிஹார மூர்த்திகளான அம்பிகை, சிவன், ஸ்ரீநரசிம்மர் மற்றும் அதிதேவதைகளும் வடிக்கப்பட்டுள்ளன. இதனால் இம்மண்டபத்திற்கு வரும் பக்தர்கள் நவக்கிரக தோஷங்கள் நீங்கப்பெற்று நல்வாழ்வு பெறுகிறார்கள்.

சுப்பிரமணியரின் சந்நிதியில் மேற்கூரையில் மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ள முருகன் அஷ்டதிக்கு பாலகர்களுடன் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல், வசந்த மண்டபத்தின் முன்புறம் கஜலட்சுமி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. பாவை விளக்கு, யாளிச் சிற்பங்கள் பொருத்திய தூண்கள் தாங்கிய தெற்கு பிரகாரம், தெற்காசியாவில் ராமேஸ்வரத்துக்கு அடுத்ததாக மிகப்பெரிய பிரகாரம்.

சித்தி தேவியுடன் நீலகண்ட விநாயகர், கங்காளநாதர், கைலாசநாதர், சாஸ்தா, ஜயந்தீஸ்வரத்து கோயில்கள், பள்ளி கொண்ட பெருமாள், ஸ்ரீ சீதாராமர், துர்க்கை, ஸ்ரீசக்கரம், கிருஷ்ணன், காலபைரவன் என்று ஒவ்வொருவருக்கும் தனி சந்நிதி இக் கோயிலில் அமைந்துள்ளன.

சீதாராமனை இருகரம் குவித்து புன்னகை மலரும் திருமுகத்துடன் காட்சியளிக்கிறார், இக்கோயிலின் வலது பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் (18 அடி உயரம்).  

திருக்கோயிலின் தளம், தூண்கள், விதானங்கள், திருமதில்கள், கோபுரங்கள், மாட மண்டபங்கள், மேற்கூரைகளிலும் எழில்மிகு தெய்வ சிற்பங்கள் கவினுற வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தனி சந்நிதி உள்ளது.

தவம், யோகம் உள்ளிட்ட அஷ்டமா சித்திகள், கல்வி இயல் முத்திரைகள், நடன மெய்ப்பாடுகள், அக்கால தண்டனை முறைகள், திருப்பணி செய்தோர் புகழ்பாடும் கல்வெட்டுகள் என்று இக் கோயில் கலைப் பெட்டகமாகத் திகழ்கிறது.

இக் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி பெருந்திருவிழா பிரசித்திபெற்றதாகும்.

Leave a Reply