ஆனைக்கு அருளிய ஆதிமூலம்! – நத்தம் ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்!

ஆலய தரிசனம்

திருச்சி, லால்குடிக்கு அருகே உள்ளது நந்தை அல்லது நத்தம் எனப்படும் சிற்றூர். லால்குடியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. நந்தை என்பதே ஸ்ரீநந்தையூர், நத்தம், நத்தமாங்குடி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கே பிரவகிக்கும் நந்தியாறு சிறப்பான இடம் வகிக்கின்றது.

நந்தியாறு: இது கங்கைக்கு ஒப்பான புண்ணிய நதி. இதற்கு ஒரு கதையும் உண்டு.

பெரம்பலூருக்கு அருகில் தோன்றி, தென்கிழக்காக ஓடிக் கொள்ளிடம் ஆற்றில் சேரும் சிறுநதி நந்தியாறு. பெரம்பலூர் அருகே, ஊட்டத்தூர் என்னும் இடத்தில் இந்த நதி மிகவும் தூய்மையானதாகக் கருதப்பட்டுள்ளது. காவிரி நதியில் எலும்புகளைப் போடுவதுபோல ஊட்டத்தூரிலுள்ள நந்தியாற்றிலும் போட்டிருக்கிறார்கள்.

ஒருமுறை அந்தணர் ஒருவர் எலும்புகளை காசியில்-கங்கை நதியில் விட எடுத்துச் செல்லும்போது, ஊட்டத்தூர் நந்தியாற்றங்கரையில் ஓர் இரவு தங்கினார். மறுநாள் காலை எலும்புகள் அனைத்தும் ஒன்றாகி லிங்க உருவாய்க் காட்சி தந்தனவாம். பின்னர் அங்கிருந்து சற்று தொலைவு நடந்து சென்று, பின் மீண்டும் பார்த்தபோது, அவை முன்னர் இருந்தவாறே எலும்புகளாகப் பிரிந்து இருந்தனவாம். இதன்மூலம் இந்தத் தலம் மற்றும் நதியின் பெருமை அறிந்து அனைவரும்

வழிபட்டனராம்.

நத்தம் மற்றும் மாங்குடி என்ற இரு ஊர்களின் நடுவே பாயும் நந்தியாறு, இவ்விரு ஊர்களையும் பிரித்துக் காட்டுவதாக திருச்சி மாவட்ட வரலாறு தெரிவிக்கின்றது. புனிதம் வாய்ந்த இந்த நந்தியாறு பாயுமிடத்தில்தான் ஸ்ரீநந்தை எம்பெருமான் ஆதிமூலப் பெருமான் அருள்பாலிக்கின்றார்.

ஆதிமூர்த்தி நாயனார் திருக்கோயில்: இந்தத் திருக்கோயிலின் பெயர், நத்தம் ஆதிமுலப் பெருமாள் திருக்கோயில். கோயிலில் பள்ளிகொண்டபெருமாள் ஆதிமூலப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தாயார்; ஆதிலக்ஷ்மி. கோயிலின் எதிரே அமைந்துள்ளது புஷ்கரிணி. அதற்கு கஜேந்திரதீர்த்தம் அல்லது சக்கரதீர்த்தம் என்று பெயர். ஆறு: நந்தியாறு.

இக்கோயிலில் ஸ்ரீ வைகானஸ ஆகம முறைப்படி, தென்கலை மரபைச் சார்ந்து பூஜைகள் நடைபெறுகின்றன. இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் இக்கோயிலில் ஊர் அன்பர்கள், உபயதாரர்கள் போன்றோரால் சித்ரா பௌர்ணமி, ஸ்ரீராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி முதலிய திருவிழாக்களும், மாசிமாத பிரம்மோத்ஸவமும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

திருக்கோயிலுக்கு வெளியே பலிபீடம் உள்ளது. அதைக் கடந்து பெரியதிருவடி கருடாழ்வாரை தரிசித்து, பிறகு உள்ளே சென்றால், நம்மை வரவேற்கிறது ஒரு சிறு கோபுர வாசல். அதற்கு அப்பால் கோயிலின் முன்மண்டபம். அதையும் கடந்து உள்ளே சென்றால் வரலாற்றை விவரிக்கும் கல்வெட்டுகள். அவற்றுள் அங்குள்ள மகாமண்டபத்தை “தாயிலும் நல்லான் திருமண்டபம்’ என அறிமுகப்படுத்தும் கல்வெட்டு, ஸ்ரீஆதிமூலப் பெருமாள் கோயில் மகா மண்டபத்தின் கிழக்குச் சுவர் வாயிலின் வலப்பக்கம் உள்ளது.

தாயிலும் நல்லான் திருமண்டபம்: கோயிலின் விமானத்தையும் இதன் முன்னுள்ள திருமண்டபத்தையும் பார்ப்பனங்கிழான் செந்தாமரைக் கண்ணனான மழவராயன் கட்டியுள்ளார். அதை “இந்த ஸ்ரீ விமானமும் தாயிலும் நல்லான் திருமண்டபமும் செய்வித்தான் பார்ப்பனங்கிழான் செந்தாமரைக் கண்ணனான மழவராயன்” என்று கல்வெட்டு எடுத்துரைக்கிறது. எனவே, ஆழ்வார் ஆசார்யர்கள் எழுந்தருளியிருக்கும் திருமண்டபம் “தாயிலும் நல்லான் திருமண்டபம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. தாயிலும் நல்லான் என்பது மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப்பெயர். அதுவே மூன்றாம் ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் “செந்தாமரைக் கண்ணன் திருமண்டபம்’ எனும் பெயரால் விளங்கிற்று.

நத்தம் ஸ்ரீஆதிமூலப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீவரதராஜர் உற்ஸவ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் சேவை சாதிக்கும் மூலவர் திருநாமம் பள்ளிகொண்ட ஆதிமூலப்

பெருமாள்.

பள்ளிகொண்ட ஆதிமூலப் பெருமாள்: கருவறையில் சயனத் திருக்கோலத்தில் தரிசனம் தரும் மூலவர், தென்திசை முடியை வைத்து, வடதிசை பாதம் நீட்டி, மேல் திசை பின்பு காட்டி, கீழ்த் திசை முகமாய்க் கொண்டு காட்சி தருகின்றார். இப்படி நாகமூர்த்தி சயனமாக, கிடந்த கோலத்தைத் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதியில் பாடியுள்ளார்.

நாகத்தணைக் குடந்தை வெஃகா திருஎவ்வுள்

நாகத்தணை அரங்கம் பேரன்பில் – நாகத்தணைப்

பாற்கடல் கிடக்கும் ஆதிநெடுமால், அணைப்

பாற் கருத்தனா வான்.

(நா.திருவந்தாதி 36)

பாற்கடலிலே அரவணைத் துயிலும் ஆதிநெடுமாலான எம்பெருமான், மக்கள் அனைவரும் பயன்பெற, அர்ச்சாவதாரமாக திருக்குடந்தை, திருவெஃகா, திருஎவ்வுள், திருவரங்கம், திருப்பேர், திருஅன்பில் ஆகிய திவ்யதேசங்களில் சேவை சாதிக்கின்றான்.

திருப்பேர் நகரில் அருள்பாலிக்கும் ஆதிநெடுமாலைப் போன்றே, இங்கும் மேல் நோக்கிய இடதுகரம் அபயமுத்திரை காட்டியபடி, ஆதி மூலமே என அழைத்த முதலை கவ்விய யானையினை அருகில் கொண்டு, யானையின் மத்தகத்தில் தன் வலது கையினை வைக்கப் பெற்றவராய், நாக மூர்த்தி சயனமாய் ஆதிமூலப் பெருமாள் அருளாசி புரிகின்றார். அருமை பல வாய்ந்த இந்தத் திருக்கோலம் கோவிலடி திருப்பேர்நகரில் அருள் பாலிக்கும் அப்பக் குடத்தான் பெருமாளை நம் கண்முன்னே நிறுத்துகின்றது. இந்த ஆதிமூலப் பெருமாளுக்கு விற்ற நிலப்பகுதி ஒன்றின் பெயர் “ஆதிமூல விளாகம்’ என்பதாகும்.

அன்பில் திவ்யதேசத்திலிருந்து வடகிழக்குத் திசையில் நத்தம் ஆதிமூலப் பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. ஆதிமூலப் பெருமாள் கோயிலில் இருந்த இரண்டாயிரவன் திருமாளிகை எனும் திருநடை மாளிகை சுவடு இன்று அழிந்துவிட்டது என்பதைத் திருக்கோயில் தல வரலாறு எடுத்துரைக்கிறது.

முதலையாகிய காலன் காலைக் கவ்வியதால், ஆதிமூலமே என்று அலறி அழைத்த ஆனைக்கு அருள்புரிந்த ஆதிமூலப் பெருமாள், நமக்கும் அருள்புரிய மாட்டாரா என்ன? காலன் அழைக்கும் பயத்தைத் தொலைக்க, மாலவன் ஆதிமூல நாயகன் அருள் பெற நத்தம் கிராமத்துக்குச் செல்வோம்.

தரிசன உதவிக்கு: கோயில் அர்ச்சகர் ஸ்ரீதர பட்டர் (தொலைபேசி எண்: 98424 96764)

தகவல்: வெள்ளிமணி

Leave a Reply