தக்ஷிணாமூர்த்தி ஆலயங்கள் – Some Dakshinamurthy Temples

கிராமக் கோயில்

அதன்படி இங்கு வந்த வியாழனாகிய குருபகவான், இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி, சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இந்தத் தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பதும், தலத்து தட்சிணாமூர்த்தியைவணங்கினால் பாவங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை. இந்தத் தலத்தில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுகிறது. இறைவனை வணங்கினால் திருமணத்தடை, நோய்கள் போன்றவை நீங்கும் என்றும், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட, ஞானம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

சென்னை, பாரிமுனை, கோயம்பேடு, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி நிறைய உள்ளன.

இலம்பையங்கோட்டூர்:

தேவலோக கன்னிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இந்தத் தலத்துக்கு வந்து தங்களது அழகு என்றும் குறையாமல் இருக்கவேண்டும் என்று அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவபெருமான், ‘யோக தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படி அருள் புரிந்தார். இவரே கோஷ்ட தெய்வமாக சின்முத்திரை தாங்கி, வலது கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோக பட்டையம் தரித்து, அபூர்வமான திருக்கோலத்தில் காட்சிதருகிறார்.

பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் பொலிவையும் மன அழகையும் பெறலாம் என்று சொல்கிறார்கள். குறிப்பாக பெண்கள் இவரை வணங்கினால் நல்ல அழகு வாய்க்கப் பெறுவார்களாம். கோயிலின் நுழைவாயிலின் அருகே தேவதைகள் வணங்கிய சிவபெருமான், ரம்பாபுரிநாதராக, 16 பேறுகளை அளிக்கும் வகையில் 16 பட்டைகளுடன் மேற்குநோக்கி காட்சி தருகிறார்.

இந்தத் தலம் காஞ்சிபுரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவு. சென்னை பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் சென்று, அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். இங்கு குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

திருநெறிகாரைக்காடு:

பொதுவாக தட்சிணாமூர்த்தி தெய்வத்துக்கு சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வர் மட்டும் இருப்பதாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்திப் பெருமான் ஏழு சீடர்களுக்கு ஞானம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் தெளிந்த ஞானம் பிறக்கும்.

இந்தத் தலம் கவுதம ரிஷியிடம் சாபம் பெற்ற இந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்கப்பட்ட தலம். மேலும், பிரகஸ்பதியின் மனைவி தாரையிடம் மையல் கொண்டு, அவள் மூலம் சந்திரனுக்குப் பிறந்த புதன், தான் பிறந்த முறையில் வெறுப்பு கொண்டு, தனியாக இந்தத் தலத்துக்கு வந்து, தனக்கு கிரக பதவி அளிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டானாம். சிவபெருமானும் வரம் தர, உரிய காலத்தில் புதனுக்கு கிரக பதவி கிடைத்ததாம். எனவே, இந்தத் தலத்தை புதன் தலமாகவும் கொண்டாடுகிறார்கள்.

இந்தத் தலம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. திருக்காலிமேடு என்றும் அழைக்கப்படுகிறது இந்தத் தலம்.

சிம்ம தட்சிணாமூர்த்தி – மன்னார்குடி

குருபகவானுக்கு உரியதலமாகப் போற்றப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்மராசியில் குருபகவான் பிரவேசிக்கும் போது மகாமகம் வரும். இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்தி நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்குமாம்.

ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டத்துக்குச் சென்றார்களாம். அப்போதுஇவர்களை துவாரபாலகர்கள் தடுக்கவே, இவர்களுக்குக் கோபம் வந்தது. அதனால் முனிவர்கள் துவாரபாலகர்களுக்கு சாபம் கொடுத்தனர். அப்படி சாபம் கொடுத்ததால், முனிவர்கள் நால்வருக்கும் தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்கவேண்டும் என்பதற்காக இந்தத் தலத்து இறைவன் பாமணி நாகநாதரையும் சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனராம். சிம்மம், கும்பம், கடகம்,தனுசு, மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களும், லக்னத்துக்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *