கொல்கத்தா- தட்சிணேஸ்வர் காளி கோவில்!

அம்பிகை ஆலயம்

கடவுள் என்று காட்டிய காளி!

கொல்கத்தா – மகான்கள் பலர் வாழ்ந்த பூமி. மகான் அரவிந்தரை நினைவூட்டும் அலிப்பூர், ஸ்ரீராமகிருஷ்ணரின் கோவில் உள்ள பேளூர், கொல்கத்தா நகருக்கே தெய்வமாக விளங்கும் அன்னை காளி கோவில் என்று ஆன்மிகச் சுற்றுலாவுக்கு கொல்கத்தா நகரில் பஞ்சமில்லை! இருந்தாலும், சுவாமி விவேகானந்தர், கடவுளைக் கண்டிருக்கிறீர்களா என்று ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்க, அவர், கடவுளைக் கண்டிருப்பது என்ன; பேசவும் செய்திருக்கிறேனே.. என்று சுட்டிக் காட்டிய, அந்த அன்னை பவதாரிணியை தரிசிக்கவே மனத்தில் வேட்கை!

கொல்கத்தா நகரம், சென்னையின் சாயலை ஒட்டி இருந்தாலும், மக்கள் நெருக்கம் அதிகம். இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் டிராம் வண்டிகள், கொல்கத்தாவின் பாரம்பரிய அடையாளம். இப்போது, சாலையின் அளவுக்கு சம உயரத்தில் டிராம் வண்டிக்கான தண்டவாளங்களையும் போட்டிருக்கிறார்கள். அதனால், டிராம் வண்டிகளோடு போட்டிபோட்டு, கார்களும் பஸ்களும் போவது வேடிக்கையான காட்சி. நகரத்துக்கே உரிய அடையாளங்கள் பல இருந்தாலும், ஒரு பிரதான சாலையின் நடைபாதை மர நிழலில், மரத்தில் ஆணி அடித்து மாட்டப்பட்ட கண்ணாடியில் முகம் பார்த்தவாறு ஒருவர் சவரம் செய்துகொள்ளும் காட்சி வித்தியாசமாகத் தோன்றியது.

முக்கிய சாலைகளின் சந்திப்புகளிலும் சரி; பூங்காக்களிலும் சரி … நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் சிலைகளை பெரும்பாலும் காணலாம். நகருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த தலைவர்கள்.

நகரின் முக்கியப் பகுதியில் உள்ளது கோவில். கங்கை ஆற்றின் (ஹூப்ளி) கரையில் அருமையான சூழலில் உள்ளது. கரைபுரண்டு ஓடும் ஆறு. தண்ணீருக்கு பஞ்சமில்லை. எல்லாம் கங்காமாதாவின் கருணை. கோவிலுக்கு அருகே, குளிப்பதற்கு என்று படித்துறைகள் நிறைய உள்ளன. அவற்றை ஒவ்வொரு பெயரில் காட் என்று அழைக்கிறார்கள்.

மகான் ஸ்ரீ ராமகிருஷ்ணரால் புகழ்பெற்ற இந்தக் கோயில் கட்டப்பட்ட விதமும் சுவாரஸ்யமானதுதான். 1793ல் பிறந்த ராணி ராஷ்மோனி, ஜான்பஜாரைச் சேர்ந்த ஜமீன்தார் பாபுராஜாசந்திர தாஸை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் கணவன் இறந்துவிட ஜமீன்தாரிணியாக நிர்வாகப் பொறுப்பேற்று நன்கு கவனித்து வந்தார். அப்போது அவருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் நடந்த உரசல்கள், மோதல்கள் அந்தப் பகுதியில் வெகு பிரசித்தம்.

தேவியின் பக்தையான அவர் ஒருமுறை காசிக்குச் சென்று அன்னையை தரிசிக்க எண்ணம் கொண்டார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்யத் துவங்கினார். கிட்டத்தட்ட இருபத்து நான்கு படகுகளில் உறவினர்கள் மற்றும் பணியாளர்களுடன் தேவையான பொருள்களுடன் யாத்திரைக்குத் தயாரானார்கள். அவர்கள் செல்லவேண்டிய தினத்துக்கு முந்தினநாள் இரவு, ராணி ராஷ்மோனியின் கனவில் தேவி தோன்றினாள். நீ காசிக்கு வந்துதான் என்னை தரிசிக்க வேண்டும் என்று இல்லை… இந்த கங்கை நதியின் முகத்துவாரத்தில் எனக்காக ஒரு ஆலயம் எழுப்பி, அதில் என்னை பிரதிஷ்டை செய். அங்கே நான் இருந்து, உன் பக்தியை ஏற்றுக்கொண்டு அருள்தருகிறேன்…” என்றாள் அன்னை.

அடுத்த நாள், அன்னையின் உத்தரவை செயல்படுத்தினார் ராஷ்மோனி. கங்கைக் கரையில் இடம் வாங்கப்பட்டது. வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக கோயில் அமைய, அழகான மேடை கட்டி, அதன் மீது கோயிலை அமைத்தார்கள். 1847ல் இருந்து 1855க்குள் கோவிலைக் கட்டி முடித்தனர். 1855 மே 1ம் தேதி அன்னையின் விக்ரஹம் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்னை ஸ்ரீஸ்ரீ ஜகதீஸ்வரி மஹாகாளி எனப்பட்டாள். கோவிலின் பூஜாரியாக, ராம்குமார் சட்டநூபாத்யாய என்பவர் நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக அவருடைய தம்பி கதாதர் அவருடன் சேர்ந்து கொண்டார். ஆனால், ஒரு வருடத்துக்குள் ராம்குமார் சட்டநூபாத்யாய இறந்துவிடவே, பிரதான பூஜாரியாக கதாதரே நியமிக்கப்பட்டார். அவருடன் அவர் மனைவி சாரதாதேவியாரும் தரைத்தளத்தில் இருந்த மிகச் சிறிய அறையான நஹபத்தில் (இசை அறை) வந்து தங்கினார். இன்று அந்த அறை, சாரதா தேவியாரின் நினைவாக அழகுறத் திகழ்கிறது. இந்த கதாதர்தான், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸராக, உலகம் போற்றும் மகானாகத் திகழ்ந்தவர். சுமார் முப்பது ஆண்டுகள் அன்னையின் பணியில் இருந்தார். கடவுளைக் கண்டிருக்கிறேன் என்று சுவாமி விவேகானந்தருக்கு வழிகாட்டிய ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தி சாதனையால், தட்சிணேஸ்வர காளி கோயிலின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது.

அன்னை மகாகாளி பவதாரிணி என்று பக்தர்களால் போற்றப்படுகிறாள். சாக்த தந்த்ர சாஸ்திரத்தில் ஒரு வகையின்படி இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் சயனித்திருக்கும் சிவனாரின் மார்பில் ஒரு காலை ஊன்றியபடி, சிவந்த நாக்கை நீட்டியபடி, அகல விரித்த கண்களுடன் கையில் தாமரைப் பூ ஏந்தி அன்னை காட்சி தருகிறாள். அன்னையை தரிசிக்கும் போது, மகான் ஸ்ரீராமகிருஷ்ணரே நம் மனத்தில் நிறைகிறார்.

அன்னையின் பிரதான கோவிலின் வலப்புறம், கிழக்கு நோக்கிய பன்னிரண்டு சிவன் சந்நிதிகள் உள்ளன. வங்காளக் கோவில் கட்டடக் கலையை பிரதிபலிக்கும் இந்தக் கோவில் வளாகத்தின் வடகிழக்குப் பகுதியில் ராதாகாந்தர் கோவில் ஒன்றும் இருக்கிறது. ராதையும் கண்ணனும் அங்கே தரிசனம் தருகிறார்கள்.

அன்னை காளியை தரிசித்து, ஸ்ரீராமகிருஷ்ணர் நினைவாக எழுப்பப் பட்டிருக்கும் பேளூர் மட த்துக்கும் சென்று வந்தால், இந்த யாத்திரை முழுமை பெறும். பேலூர் மடத்தில்தான், சுவாமி விவேகானந்தர் சமாதிக் கோவிலும் உள்ளது. எனவே, கொல்கத்தா பயணத்தையும் நம் பட்டியலில் வைத்துக் கொள்ளலாம். ஆன்மிகச் சுற்றுலாதான், நம் நாட்டின் இதயத் துடிப்பு ஆயிற்றே!

Leave a Reply