சமயபுரம் மாரியம்மன் கோயில்

அம்பிகை ஆலயம்

அம்பாள் வழிபாட்டில் முதன்மைப் பெற்று விளங்கும் இந்தத் திருக்கோயில் காவிரியின் வடகரையில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் கிருஷ்ணர் அவதாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த அவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரிக்கின்றனர். அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தால் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனை கம்சன் அறிந்து கொண்டாலும், குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறிய இயலாதவனாகிறான்.

குழந்தையைக் கொல்லத் துணிந்த கம்சன், தேவகியின் அறைக்குச் சென்று குழந்தையைத் தூக்க முற்படுகின்றான். ஆனால், அருகில் நெருங்க முடியாதபடி அந்தக் குழந்தை தன் உண்மையான அவதாரத்தைக் காட்டி நின்றது. அன்னையின் அற்புதத் தோற்றத்தைக் கண்ட கம்சன் பின் சம்ஹாரம் செய்யப்பட்டான்.

மகா சக்தியாக தோன்றிய அம்பாள், தனது எட்டுக் கரங்களிலும் எண்ணணற்ற ஆயுதங்களைத் தாங்கி இவ்வுலகைக் காக்க அவதரித்து நின்றாள். இத்தேவியே மகாமாரி என்னும் மாரியம்மனாகக் கண்கண்ட தெய்வமாக மக்களால் பூஜிக்கப்படுகிறாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருத்தலத்தில் இருந்த அம்மனின் திருமேனி உக்கிரம் மிகுந்து இருந்தமையால், அங்கு அப்போது இருந்த ஜீயர் சுவாமிகள் அம்மனின் திருவுருவத்தை மற்றொரு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்தார்.

அதன்படி பணிவிடை புரிவோர் அத்திருவுருவத்தை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிச் சென்று ஒரு இடத்தில் இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினர். அவர்கள் இளைப்பாறிய அந்த இடம் இப்போது இனாம் சமயபுரம் என்ற பெயரில் உள்ளது.

அதன் நினைவாகவே இப்போதும் இத்திருக்கோயிலின் திருவிழாவில் எட்டாம் நாளான அம்மன் அங்கு சென்று ஓர் இரவு ஓய்வு எடுக்கும் வைபவம் நடைபெற்று வருகிறது.

இளைப்பாறிய அப்பணிவிடையாளர்கள் அங்கிருந்து தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் அன்னையின் திருவுருவத்தை வைத்துவிட்டுச் சென்று விடுகின்றனர். அவ்வாறு அவர்கள் வைத்த இடத்திலேயே இன்று அன்னை மாரியின் திருக்கோயில் அருளாலயமாகத் திகழ்கிறது. மேலும், அன்னை மாரியின் திருவுருவம் கண்ணனூர் மாரியம்மன் என்னும் திருப்பெயர் கொண்டு அருள் வழங்குகிறாள்.

திருத்தலத்தின் சிறப்பு: திருக்கடையூரில் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில், எமதர்மனன் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.

அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்திகளின் வேண்டுகோளுக்கிணங்க மாயாசூரனையும், அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்கள் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கது இத்திருத்தலம்.

இன்றும் கருவறையில் உள்ள அம்பாளின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம். இன்றும் இத்திருக்கோயில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது.

உற்ஸவ அம்பாளுக்கு தினமும் 6 கால பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. காலை 7.30 மணி மறறும் மாலை 5.30 மணிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் வடக்குப் பிரகாரத்தில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறுகின்றனர்.

தல விருட்சம்: இத்திருக்கோயிலின் தல விருட்சமாக விளங்கி வருவது வேம்பாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இம்மரம், தற்போது திருக்காப்பு விண்ணப்பச் சீட்டை விண்ணப்பிக்கும் முதன்மை இடமாகத் திகழ்கிறது.

அம்பாளுக்கு திருப்பூஜைகள் நடைபெறும் போது தல விருட்சத்திற்கும் பூஜைகள் நிகழ்த்துவது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

மூர்த்தி: அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கருவறையில் அம்பாள் வீற்றிருப்பதாக வழக்கமானதாக இருப்பினும், மற்றக் கோயில்களை விட இங்கு மாறுபட்ட வடிவம் கொண்டு அன்னை அருளாட்சி வழங்குகிறாள். மூலவரின் திருவுருவம் மரத்தால் ஆனதென்றாலும், அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது புதுமையானது.

தங்கஜடா மகுடம் மற்றும் குங்கும மேனி நிறத்தில் நெற்றியில் அழகிய வைரப்பட்டைகள் மின்ன கண்களில் அருளொளி வீச வைரக் கம்மல்களுடனும், மூக்குத்தியுடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் மாரியம்மன்.

ஆதிசக்தியான அம்மன் தனது எட்டுக் கைகளில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள்.

இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில், சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி அருள் வழங்கிக் கொண்டுள்ளார் மாரியம்மன்.

திருவிழாக்கள்: இந்தத் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா, மாசி மாதத்தில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள்.

தை மாதத்தில் 11 நாள்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலிலிருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது.

பங்குனி கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சித்திரைத் தேர்த் திருவிழாவுக்கான கொடியேற்றமும், சித்திரை முதல் செவ்வாய்க்கிழமை சித்திரைப் பெருந் திருவிழாவும் நடைபெறுகிறது.

பூஜைக் காலங்கள்: காலை 6 மணிக்கு உஷக் கால பூஜையும், காலை 8 மணிக்கு கால சந்தி, பிற்பகல் 12 மணிக்கு உச்சிக் காலம், மாலை 6 மணிக்கு சாய ரட்சை, இரவு 8 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 9 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும் நடைபெறுகிறது. அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். திருவிழாக் காலங்களில் மாறுதலுக்குள்பட்டு இருக்கும்.

மேலும், விவரங்கள் தேவைப்படுவோர் www.samayapurammariamman.org என்ற வலைத்தளத்தில் சென்று பார்க்கலாம்.

திருக்கோயில் அலுவலகத் தொலைபேசி எண்கள் :0431-2460670, 2670557

உள்துறை அலுவலகம் : 0431-2670907.

Leave a Reply