“ஆடி’யில் தேடி …

அம்பிகை ஆலயம்

ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை “சக்தி மாதம்’ என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.

அம்மனுக்கு உகந்த ஆடி!

பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அன்னை காமாட்சி தேவி, பரமசிவனை நோக்கித் தவமிருந்து, ஈசனை அடையும் பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான். தேவியின் திருவுருவங்களில் ஒன்றான வாராஹி தேவியைச் சிறப்பிக்கும் நோக்குடன் “வாராஹி நவராத்திரி’ இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. தைரியத்தையும், வெற்றியையும் அருள்பவள் வாராஹி தேவி.

ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். காவடி எடுத்தல், தீமிதி, கூழ் ஊற்றுதல் என்று ஊரே அமர்க்களப்படும். படவேடு ரேணுகாம்பாள், திருவேற்காடு கருமாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் போன்ற பல திருத்தலங்களில் திருவிழாக்கள் அரங்கேறும். ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும்.

ஆடிப்பூரம்!

ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் “ஆடிப்பூரம்’ என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்தபோது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக் கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.

ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. உலக மாதாவாகிய பார்வதி தேவி ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. அன்னையை விரதமிருந்து தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.

புதுமணத் தம்பதிக்கு சீர்!

இத்தகைய பெருமைகள் மிக்க ஆடி மாதத்தின் முதல் நாளே பண்டிகை தினம் தான். “ஆடிப் பண்டிகை’ என்றழைக்கப்படும் இத்திருநாளில் புதுமணத் தம்பதிகளுக்கு சீர் செய்து அவர்களைப் பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து கொடுப்பார்கள். பிறகு கணவரை மட்டும் அனுப்பிவிட்டு பெண்ணை மாதம் முழுவதும் தங்க வைத்துக் கொள்வார்கள். “ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி’ என்ற பழமொழிக்கேற்ப மாப்பிள்ளைக்கு தேங்காய்ப் பால் கொடுத்து உபசரிப்பார்கள்.

ஆடி முளை கொட்டு!

திருச்சி அருகேயுள்ள நெடுங்களநாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது படும். இச்சமயத்தில் சூரிய பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் “ஆடி முளை கொட்டு விழா’ பத்து நாட்கள் சிறப்பாக அரங்கேறும்.

ஆடிப் பெருக்கு!

ஆடி மாதத்தில் ஜீவ நதிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதை “ஜலப்பிரவாக பூஜை’ என்று கூறுவதுண்டு. இறைவனின் அருள் மழையாகப் பொழிந்து, வெள்ளமாக ஓடி உழவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஊட்டும் நாள் இந்நாள்.

இதன் அடிப்படையில் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆடிப் பதினெட்டு கொண்டாடப்படுகிறது. “ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கேற்ப இம்மாதத்தில்தான் விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளைத் துவக்குகிறார்கள். திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணமாவதற்காக அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்ளும் வைபவமும் நடக்கும்.

ஆடி செவ்வாய்; ஆடி வெள்ளி!

இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்வார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.

ஆடி வெள்ளியில் வரும் வரலட்சுமி விரதம் சிறப்பான மகாலட்சுமி பூஜையாகும். வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று, பூஜை செய்து உபசரித்தால் மகாலட்மியின் அருட்கடாட்சப் பார்வை கிடைக்கும் என்பது திண்ணம். இந்தக் கிழமைகளில் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் “நவசக்தி அர்ச்சனை’ நடைபெறும். ஆடி வெள்ளியில் “சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

இந்த வெள்ளியில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீவித்யா பூஜை நடைபெறும். இந்த தேவியின் காதுகளில் ஸ்ரீசக்ரமே தாடங்கமாக உள்ளது குறிப்பிடத் தக்கது. இவ்வாலயத்தில் ஆடிவெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிகால வேளையில் பார்வதி தேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் காட்சி தருகிறாள்.

புதுச்சேரியில் வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தின் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும், தேவியின் வீதி உலாவும் நடைபெறும். ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

இதுதவிர ஆடி செவ்வாயில் ஒüவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒüவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.

இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள். பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம் இரவு பத்து மணிக்கு மேல் துவங்குகிறது. அச்சமயத்தில் ஆண்கள் யாரும் அவ்விடத்தில் இருப்பதில்லை. பின்னர் ஒüவையார் கதையை வயதான பெண்மணி கூறுவார். ஒüவையை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து இரவைக் கழிப்பர். இதுவே ஒüவை நோன்பு. இந்த வழிபாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெறுகிறது.

தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் கோயில் கொண்டிருக்கும் ஆலினி துர்க்கை தேவியின் முழு உருவத்தை, ஆடி மாதம், மூன்றாவது செவ்வாய் மாலை நான்கு மணி முதல் ஒன்பது மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே பெற முடியும்.

ஆடி பௌர்ணமி!

சதுர்மாஸ்ய விரதம் தொடங்கும் மாதம் இதுவே. சந்நியாசிகள் ஓரிடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்காரங்களைத் தொடங்குவர். இது நான்கு மாதங்கள் நடைபெறும். வியாச பூஜையும் அரங்கேறும். ஆடிப் பௌர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் இந்த பூஜை நடைபெறுகிறது. திருநெல்வேலி, சங்கரன்கோயிலில் எழுந்தருளியுள்ள கோமதி அம்மன், புன்னைவனத்தில் ஆடிப் பௌணமியன்று தவமிருந்தார். ஈசன் விஷ்ணுவுடன் காட்சி தர வேண்டும் என்பதற்காக ஊசி முனையில் கடும் தவம் புரிந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கி, ஆடிப் பௌர்ணமி, உத்திராட நட்சத்திரத்தன்று சங்கர நாராயணர் காட்சி அளித்தார். ஹயக்ரீவரின் அவதார தினமும் இந்நன்னாளே என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி அருகேயுள்ள உறையூரில் அருள் புரிகிறார் பஞ்சவர்ணேஸ்வரர். உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியதால் “ஐந்து வண்ணநாதர்’ எனப்படுகிறார். இது ஆடிப் பௌர்ணமி அன்று பஞ்சப் பிராகார விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடி அமாவாசை!

ஆடி அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது விசேஷம். இந்நன்னாளில் சுமங்கலி பூஜையும் செய்கின்றனர்.

ஆடி கிருத்திகை!

ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள். அவரது ஜென்ம நட்சத்திரமும் ஆயிற்றே! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து தண்டபாணியை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த ஆடி மாதத்தில், இறைவழிபாட்டில் தோய்ந்து தெய்வ பெறுவோம்.

ரஞ்சனா பாலசுப்ரமணியன்

ஜெய் ஜெய் விட்டல்!

ஆடி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை “யோகினி ஏகாதசி’ என்றும், வளர்பிறை ஏகாதசியை “சயினி ஏகாதசி’ என்றும் குறிப்பிடுவர்.

குபேரனுக்கு புஷ்பம் கொடுக்கும் ஹேமமாலி என்பவன் தன் மனைவி மீது கொண்ட காதலால் தனது பணியை மறந்து போனான். அதனால் குபேரனின் சாபத்திற்கு ஆளாகி குஷ்ட நோயால் அவதிப்பட்டான். பின்னர் யோகினி ஏகாதசி அன்று விரதமிருந்து நோயிலிருந்து மீண்டான். இதுவே யோகினி ஏகாதசியின் சிறப்பு.

மகாபலியின் கர்வத்தை அடக்க திரிவிக்ரமனாகத் தோன்றினார் மகாவிஷ்ணு. மகாபலியை அடக்கி பாதாளத்திற்கு அனுப்பிவிட்டு திருப்பாற்கடலுக்குச் சென்றவர் ஆடி மாத வளர்பிறை ஏகாதசியில் பாம்பணையில் சயனித்தார். எனவே இது சயினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் சயினி ஏகாதசியை “ஆஷாட ஏகாதசி’ என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பாலையும், தயிரையும் காவடி போல் தோளில் சுமந்து கொண்டு, “”பாண்டு ரங்க விட்டலா, பண்டரி நாதா விட்டலா” என்றும் “”விட்டல் விட்டல் ஜெய்ஜெய் விட்டல்” என்றும் கோஷமிட்டுக் கொண்டு பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனை தரிசிப்பார்கள்.

தகவல்: வெள்ளிமணி

Leave a Reply