பிரதோஷம்: ஸ்பெஷல் திருக்கோவில்கள்!

ஆன்மிக கட்டுரைகள் சிவ ஆலயம்

வடக்கே உள்ள மலைத் தலமான கயிலை மலை, எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்ட முக்தி உலகமான திருக் கயிலாயம் எனப்படும் சிவலோகம், கும்ப கோணம் அருகே ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோயில் , பாண்டிச்சேரி அருகே ஒழிந்தியாப்பட்டு எனப்படும் அரசிலி அரசிலி நாதர் கோயில் , காஞ்சிபுரம் அருகே திருமால் பூர் எனப்படும் திருமாற்பேறு மாறிலா மணிகண்டீசர் கோயில், கும்ப கோணம் அருகே குடவாசல் பக்கம் திருவிடைவாய் புண்ணிய கோடீஸ்வரர் கோயில் ஆகிய தலங்கள் பிரதோஷ வரலாறு கூறும் தலங்களாகும்

கயிலை மலை : சாகாமல் இருக்க அமிர்தம் பெறுவதற்காக தெய்வங்கள் தேவர்கள் எல்லாம் பாற்கடல் கடைந்த போது எல்லோரையும் சாக அடிக்கும் ஆலகால நஞ்சு வெளிப்பட்டது. விஷத்தின் வெப்பக் காற்றினால் உடல் கருகிய அரி அம்மன் முதலிய தெய்வங்கள் எல்லாரும் தங்களைக் காத்தருளுமாறு கயிலை நாதனை வேண்டி கயிலை மலையை வலம் வந்தனர்.

ஒளி திகழ் மேனி கருகினார் எல்லாம் கை தொழுது ஏத்த (சம்பந்தர்)

எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி அடைந்து நும் சரணம் என்ன (அப்பர்) என விஷம் மாறி மாறித் துரத்தியதால் தெய்வங்களும் தேவர்களும் இடமும் வலமுமாய் மாறி மாறிச் சுற்றிக் காப்பாற்றுமாறு தொழுது வேண்டினர்.. இதனால் பிரதோஷ நாளில் மட்டும் பிரதட்சிணம் அப்பிரதட்சிணம் என்று சிவாலயங்களில் இடமும் வலமுமாய்ச் சுற்றித் துதிக்கப்படுகிறது.

சிவலோகம் திருக் கயிலாயம் இது எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்ட இரவு பகல் மாற்றம் இல்லாத ஒளி உலகம். அரி அயன் சக்தி முதலிய பிறப்பு உள்ள யாரும் செல்ல முடியாத காண முடியாத முக்தி உலகம்.

முக்தி பெற்ற ஆத்மாக்களாகிய சிவ கணங்களுடன் பரம சிவம் சதா சர்வ காலமும் இருக்கும் புண்ணிய உலகம். சுந்தரர் என்ற சிவ கணத்தை அனுப்பி விஷத்தைத் திரட்டிக் கொண்டு வரச் செய்த சிவலோக நாயகன் ஆலகால விஷத்தை வாங்கி உணவு போல் உட்கொண்டு அருளினார். விஷத்தின் காற்றால் மேனி கருகிய அரி அயன் அம்மன் முதல் புல் வரை எல்லா ஜீவராசிகளையும் எல்லா உலகங்களையும் அழியாமல் பாதுகாத்தருளினார்
ஒளி திகழ் மேனி கருகினார் எல்லாம் கை தொழுது ஏத்தக் கடலுள் நஞ்சு அமுதமா வாங்கிப் பருகினார் (சம்பந்தர்)
சிற்றுயிர்க்கு இரங்கிக் காய் சின ஆலம் உண்டாய்  ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட மேலாய *தேவர் எல்லாம் வீடுவர் காண் (திருவாசகம்) என்று தெய்வீகத் திருமுறைகள் போற்றுகின்றன.

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் ⚜️ சிவ லோக நாயகன் சிவ லோகத்தில் விஷத்தை உட்கொண்டதால் உயிர் பிழைத்த அரி அயன் அம்மன் முதலிய தெய்வங்கள் விரட்டி அடித்த விஷம் திடீரென்று எங்கு போயிற்று என்ன ஆயிற்று என்று தெரியாமல் கலங்கினர்.

தங்களைக் காத்தருளிய கோலத்தைக் காட்டியருள வேண்டும் என்று துதி செய்து தொழுத போது பரா பரன் உட்கொண்ட விஷத்தை நீல மணி போல் கழுத்தில் நிறுத்தி வைத்து நீல மணி கண்டனாக, விட ஆபரண மூர்த்தியாகத் திருக்காட்சி அருளினார்.
அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் (திருக்கோவையார்)
நீலமார் கடல் விடம் தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த சீலம் (சுந்தரர்)
என்று விடத்தை நீல மணி போல் நகை போல் ஆபரணம் போல் கழுத்தில் வைத்து அருளிய நீல மணிகண்டனை விடாபரண மூர்த்தியைத் திருமுறைகள் போற்றுகின்றன.

திருக் காட்சி அருளிய ஈசனது அழகிய நீல மணி கண்டத்தில் மயங்கிய உமை அது விஷம் என்பதை மறந்து கழுத்தைத் தீண்டிய போது விஷ வேகத்தால் இளமையும் அழகும் இழந்து முதுமை அடைந்து விருத்தாம்பிகை ஆனாள் . பல தலங்களிலும் சிவ பூஜை செய்து சிவனருளால் மீண்டும் இளமையும் அழகும் பெற்று பாலாம்பிகை ஆனாள்.

ஒழிந்தியாப்பட்டு அரசிலி நாதர் கோயில் ,:
ஆலங்குடியில் திருக்காட்சி அருளிய ஈசனது அழகிய நீல மணி கண்டத்தைத் தீண்டிய பரா சக்தி இளமையும் அழகும் இழந்து முதுமை அடைந்து விருத்தாம்பிகை ஆனதைக் கண்டு வருந்திய தெய்வங்களும் தேவர்களும் கழுத்தில் மணி போல் இருந்த விடம் எப்போது யாரை என்ன செய்யுமோ என்று அஞ்சிக் கலங்கி அரசிலியில் பூஜை செய்து தொழுத போது பரமேசுவரன் அவர்களது அச்சத்தை ஒழித்து விஷத்தை அமிர்தமாக மாற்றியருளினார்.

ஆலம் உண்டு அமுதே மிகத் தேக்குவர் (அப்பர்)
உம்பர் உய்யக் களமாம் விடம் அமிர்தம் ஆக்கிய தில்லைத் தொல்லோன் (திருக்கோவையார்)
என உட்கொண்ட விடத்தைக் கழுத்தில் அமிர்தமாக்கித் தேக்கி அருளிய அமுதீசரின் எல்லாம் வல்ல கருணையைத் திருமுறைகள் போற்றுகின்றன.

திருமால்பூர் (திருமாற்பேறு) மாறிலா மணிகண்டர் கோயில் .  விஷம் அருந்தியும் அதைக் கழுத்தில் வைத்தும் எந்தவிதமான மாற்றமும் இல்லாத எல்லாம் வல்ல ஈசனுக்கு மாறிலா மணிகண்டர் என்று அருள் நாமம். கழுத்து விஷத்தையும் கடலில் கலந்த விஷத்தையும் அமுதம் ஆக்கி அனைவருக்கும் ஆனந்தம் அருளி மீண்டும் பாற்கடல் கடையச் செய்து அமிர்தம் பெற அருளிய அமிர்தேஸ்வரரை மாறிலா மணியே என்று தெய்வங்கள் போற்றித் தொழுதனர்.

திருவிடைவாய் புண்ணிய கோடீசுவரர் கோயில் விஷத்தினால் அஞ்சி ஓடிக் கலங்கித் துன்புற்ற அரி அயன் அம்மன் முதலிய தெய்வங்கள் தேவர்கள் எல்லோரும் கண்டு களித்து ஆனந்தம் அடையுமாறு விடையின் மேல் நந்தியின் மேல் நாட்டியம் ஆடிய சந்தியா தாண்டவர் தலம். பிரதோச நாளில் நடராஜருக்குப் பூஜை அபிடேகம் நடக்க வேண்டும்.

நந்தியின் மேல் நடராஜரே காட்சி அருளி வலம் வர வேண்டும். ஆனால் எந்தக் கோயிலிலும் பிரதோஷப் பூஜை முறையாக நடத்தப்படுவதில்லை. நடராஜரைப் பூஜிக்காமல் வழிபடாமல் தரிசனம் செய்யாமல் பிரதோஷ வழிபாடு விரதம் முழுமை பெறாது. சிவ லோகத்து ஆனந்தக் கூத்தன் பதஞ்சலி வியாக்கிர பாத முனிவர்களுக்காகத் தில்லையில் எழுந்தருளிய நாள் தைப் பூசம்.

Leave a Reply