சிருங்கேரி தரிசனம்
அம்பாளை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிகலிங்கமான சந்திரமௌலீஸ்வரரையும், ரத்தினகர்ப்ப கணபதியையும், சிருங்கேரி பீடத்தின் முதல் பீடாதிபதி சுரேஷ்வராச்சார்யரிடம் கொடுத்து பூஜை செய்யக் கூறினாராம். இந்த ஸ்படிகலிங்கத்துக்கே, இன்றுவரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனராம்.
ஸ்ரீசந்திரமௌலீஸ்வரரை தரிசித்து, சுவாமிகளை வணங்கி பிரசாதம் பெற்றுக் கொள்கிறோம். அங்கே ஓர் ஓரமாக பாதபூஜை தனியாக நடக்கிறது. இந்த வருடம்(2010) … சிருங்கேரி பீடத்தின் தற்போதைய 36-வது பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகாசுவாமிகளின் 60-வது வர்தந்தி (பிறந்தநாள்) என்பதால், அந்த உற்ஸவ பணிகளில் மடத்தில் உள்ளவர்கள் மிக உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார்கள்! சுவாமிகளின் 60-வது வயது நிகழ்வை நாடெங்கிலுமுள்ள மடத்தின் சிஷ்யர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ஸ்ரீபாரதீ தீர்த்த மகாசுவாமிகளின் பூர்வாஸ்ரமப் பெயர் சீதாராம ஆஞ்சநேயலு. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் அலகுமல்லபாடு அக்ரஹாரத்தில், 11.4.1951-ல் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே சிவபக்தியும் சம்ஸ்கிருத ஞானமும் மிளிர்ந்தது. இவருடைய 9-வது வயதில், சிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகளை நரசராவ்பேட்டை எனும் இடத்தில் தரிசித்து, அவருடன் சம்ஸ்கிருதத்திலேயே உரையாடினார். இவருடைய அபார ஞானத்தை அறிந்து மகிழ்ந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தருக்கு இவரை மிகவும் பிடித்துப் போனது. சுவாமிகள்பேரில் சீதாராம ஆஞ்சநேயலுவுக்கும் குருபக்தி அதிகமானது.
பின்னாளில் அவர் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தருடன் பாரத நாடெங்கும் தீர்த்த யாத்திரைகளில் பங்கேற்றார். அவருடன் இருந்து சாஸ்திரங்கள் கற்றார். 11.11.1974- ல் ஸ்ரீசாரதாம்பாள் அனுக்ரஹத்தில் சுவாமிகளால் முறைப்படி பீடத்தின் சீடராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு உரிய சடங்குகள் செய்விக்கப்பட்டன. ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் காலத்துக்குப் பிறகு, 19.10.1989-ல் சிருங்கேரி பீடத்தின் 36-வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்று பூஜைகளை குறைவற நடத்தி வருகிறார்.
சுவாமிகள் தமிழில் அழகாகப் பேசுகிறார்; தெலுங்கு கலந்த நடை. மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பன்மொழிப் புலமை மிக்கவராகத் திகழ்கிறார். சிறந்த அறிஞர்; அன்பே உருவான வடிவம்… முகத்தில் தெய்விக ஒளி பொங்கக் காட்சி தந்த சுவாமிகளின் உத்தரவு பெற்று வெளி வருகிறோம்.
அந்த அரங்கத்தையும் பழைய மடத்தையும் அடுத்து, இதற்கு முன் பீடாதிபதிகளாக இருந்த சுவாமிகள் சிலரின் அதிஷ்டானங்கள் உள்ளன. அங்கே வணங்கி சற்று நேரம் தியானம் செய்தேன். தூய்மையான மண்டபமும், வீசும் காற்றும், ஆழ்ந்த அமைதியும் அங்கே வருபவர்களை தியானம் செய்யத் தூண்டுகிறது.
அன்பும் அருளும்தானே வாழ்வின் ஆதாரங்கள். அதை சிருங்கேரிக்குச் சென்றுவரும் ஒவ்வொருவரும் நிச்சயம் உணர்வார்கள்.
சிருங்கேரி எங்கே இருக்கிறது?
கர்நாடகாவில், மங்களூருவில் இருந்து சுமார் 108 கி.மீ. தொலைவு. காலை 5 மணி முதல் மாலை 4.30 வரை மலைப்பாதையில் பஸ் வசதி உண்டு. பெங்களூருவில் இருந்தும் செல்லலாம். தங்குவதற்கு மடத்தின் சார்பில் குறைந்த கட்டணத்தில் விடுதிகள் உள்ளன. தனியார் விடுதிகளும் உண்டு. காலை மணி 6-2, மாலை 5-9 வரை கோயில் திறந்திருக்கும். மதியம் 12 முதல் 3 மணி, இரவு 7 முதல் 9 மணி வரை அன்னதானம் நடைபெறுகிறது.
தொடர்புக்கு:
நிர்வாகி,
ஸ்ரீஜகத்குரு சங்கராச்சார்ய மகாசம்ஸ்தானம்,
தக்ஷிணாம்னாய ஸ்ரீசாரதா பீடம்,
சிருங்கேரி – 577 139
போன்: 08265 – 250123 / 250192