அம்பர் மாகாளம் :: ஐயனே நேரில் வந்து பெற்ற அவிர்பாகம்!

சிவ ஆலயம்

 

இறப்பதற்கு முன் காளி தேவியின் கோர ரூபம் கண்டு பயந்த அம்பன், எருமைக் கிடாவாக உரு மாறினானாம்! அவ்வாறு அவன் மாறிய இடம், “கிடா மங்கலம்’ என்று இன்றழைக்கப்படுகிறது. எருமைக் கிடாவாக மாறிய அவனை விரட்டிச் சென்ற காளி, “அம்பகரத்தூரில்’ அவனைக் கொன்று அழித்ததாகத் தல புராணம் கூறுகின்றது.

இன்றும் ஈசரது கட்டளைப்படி சிவராத்திரி நான்கு காலங்களிலும் முறையே அம்பர் மாகாளம், அம்பர், இளையாத்தங்குடி, திருச்சாத்தமங்கை ஆகிய தலங்களில் சிவனை காளியன்னை வழிபடுவதாக ஐதீகம். அம்பகரத்தூர் காளியை வழிபட்ட பின் கோவில் திருமாளத்திற்கு வந்து, காளி உருவாக்கிய லிங்கத்தை வழிபடுவதும், பின் மூலவரை தரிசிப்பதும் தொன்று தொட்டு வரும் மரபாகும்!

முனிவரின் மகள்:

மதங்க முனிவர் இத்தலத்தில் தங்கி, இறைவனை வணங்கி, தனக்கு புத்திர பாக்கியம் வேண்டினார்! அதன்படி ஈசனருளால் ஓர் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு “ராஜ மாதங்கி’ எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார். அப்பெண்ணும் வளர்ந்து பருவமடைந்தாள்! பார்வதி தேவியே தனக்கு மகளாகப் பிறந்ததை அந்நிலையில் உணர்ந்த முனிவர், பரவசப்பட்டார். மதங்கரின் பிரார்த்தனையை ஏற்று, இத்தலத்தில் ஈசனை மணந்து, திருமணக் கோலத்திலே அருள் பாலிக்கின்றாள் ராஜ மாதங்கி. மணக்கோலத்தில் இங்கே வீற்றிருந்த வேளையில் தேவியானவள் பரமேஸ்வரனிடம் கேட்ட வரத்தின்படி, திருமணத் தடையுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால், விரைவில் “கெட்டி மேளம்’ ஒலிக்கும்!

வாசுகி மாநாகம்:

அஷ்ட மாநாகங்களில் ஒன்றான வாசுகி நாகம், தனக்கு ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷத்தை நீக்கிட, பல தலங்களுக்கும் சென்று வழிபட்டது! இருப்பினும் பலனில்லை! இறுதியில் பரமனின் திருவருளால் இந்த மாகாளம் வந்து, சர்வேஸ்வரனை வணங்கிட உரிய பலன் கிட்டியது! எனவே ராகு பரிகாரத்திற்கும், நாக தோஷ நிவர்த்திக்கும் உகந்த தலமாகிறது, அம்பர் மாகாளம்!

சோமாசி மாற நாயனார்:

கி.பி. 9ஆம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் இக்கோவில் திருமாளத்தில் வாழ்ந்த சிவனடியார், “சோமாசி மாற’ நாயனார்’! இவர் தனது மனைவி சுசீலையுடன் சோமயாகம் செய்ய விரும்பினார்! அந்தப் பெருமைமிகு யாகத்தில் “அவிர்பாகம்’ பெற, திருவாரூர் தியாகேசப் பெருமானையே அழைக்க விரும்பியது நாயனாரின் உள்ளம்! அந்தப் பரமனையே “அவிர்பாகம்’ பெற அழைப்பது அவ்வளவு எளிதானதா என்ன? “யாரை அணுகினால் இது சாத்தியமாகும்?’ என எண்ணினார்! உடன் அவர் மனத்திரை முன் வந்து நின்றார், குரு நாதராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள்! அவர்தான் தம்பிரான் தோழனாயிற்றே! உடன் திருவாரூருக்குப் புறப்பட்டார்!
தான் செய்யவிருக்கும் யாகத்தில் தியாகேசர் நேரில் கலந்து கொண்டு “அவிர்பாகம்’ பெற வேண்டுமென்ற தனது வேட்கையை சுந்தரரிடம் தெரிவித்தார் சோமாசி மாறர்! அவ்வேண்டுகோள், சுந்தரர் வாயிலாக தியாகேசருக்கு எட்டியது! சுந்தரர் மூலமாக தியாகேசரைப் பணிந்த சோமாசியாருக்கு அசரீரி வாக்காக இறைவன், “”நான் அந்த யாகத்தில் கலந்து கொள்கிறேன். ஆனால் எப்போது, எப்படி, எந்த உருவத்தில் வருவேன் என்பதைத் தெரிவிக்க மாட்டேன். தன்னைக் கண்டு அச்சப்படவோ, அருவருப்படையவோ வேண்டாம்” என்று கூறியருளினார்.

சோமாசியாருக்கு பெரு மகிழ்ச்சி! எந்த உருவில் வந்தால் என்ன? இறைவன் வருவதே பெரும் பாக்கியம்தானே!! வைகாசி மாதம், ஆயில்ய நட்சத்திரம் கூடிய நன்னாளில், “அச்சம் தீர்த்த கணபதி’ ஆலயம் எதிரே யாகசாலை அமைக்கப்பட்டு, யாக பூஜை இனிதே தொடங்கியது! வேத விற்பன்னர்களின் வேத கோஷங்களோடு தொடங்கிய யாகத்தில் அப்பொழுது அவிர்பாகம் தர வேண்டிய நேரம்! இறைவன் வரவில்லை! ஆனால் அதற்கு மாறாய் சற்று தூரத்தில் ஒரு வினோதக் கூட்டம்! யாகத்துக்குப் பொருந்தாத அந்தக் கூட்டத்தினரைக் கண்ட வேதியர்கள், நாலாபுறமும் பறந்தோடினர்! சோமாசியாரோ யாகத்திற்கு பங்கம் விளைந்துவிடுமோ என அஞ்சினார்!
தலைபாகை கட்டிய ஆஜானுபாகுவான ஓர் ஆண்மகன் முன்னே வர, அவனது துணைவிகள் குடம் சுமந்தபடி பின்னே வர, இரண்டு சிறு பாலகர்கள் உடன் வர, அவர்கள் தோற்றத்தைப் பார்த்தவர்கள் பதைத்தனர்! மாறரோ ஒரு கணம் கண்மூடி கணபதியை தியானித்தார்! அச்சம் தீர்த்த கணபதியின் திருவருளால் உண்மை உணர்ந்தார்! வந்திருப்பது அந்த தியாகேச மூர்த்தியே என்பதவருக்குப் புரிந்தது!
அடுத்த கணம் ஓடிச் சென்று அவர்கள் திருமுன் விழுந்து, அவர்களை வணங்கி வலம் வந்தார் நாயனார். பேரொளிப் பிரவாகமாக ரிஷபத்தின் மீது தேவியுடன் அத்தருணத்தில் எழுந்தருளி, அற்புத தரிசனம் தந்து, அவிர்பாகத்தினைப் பெற்று, அருள்புரிந்து மறைந்தார் ஆரூர் அண்ணல்!!
இன்றும் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில், இவ்வைபவம் பெருவிழாவாக இங்கு விமரிசையுடன் நடத்தப்படுகின்றது! இவ்விழாவினைக் காண வருவோர் பருகிட நீர் மோரும், பானகமும் பொது மக்கள் அளிக்கின்றனர். தெருவெங்கும் மாக்கோலம் போடப்பட்டு, விழாக் கோலம் காண்கிறது அம்பர் மாகாளம்.
வருடா வருடம் வைகாசி ஆயில்யத்தன்று தியாகராஜப் பெருமான் அம்பர் மாகாளத்திற்கு எழுந்தருளுவதால், அன்று திருவாரூர் தியாகேசர் சந்நிதியில் உச்சிகால பூஜை கிடையாது என்பது இன்று வரையிலும் கடைபிடிக்கப்படும் மரபு.

கோயில் அமைப்பு:

கிழக்கு நோக்கிய ஐந்து மாட ராஜகோபுரம் அற்புதமாய் நிமிர்ந்து நிற்கிறது! அதோடு நாற்புறமும் ஓங்கி நிற்கும் திருமதில்கள்! உள்ளே இரண்டு பிராகார அமைப்புகள்! இவற்றில் வெளிப்பிராகாரம் மிகவும் விசாலமானது! நேராக நந்தி, பலிபீடம் மற்றும் கணபதி காட்சி தர, இரண்டாம் ராஜகோபுரம் மூன்று மாடங்கள் கொண்டு அகலவாட்டில் உள்ளது! இங்கேயும் “துவார கணபதி’ வீற்றுள்ளார்!
அக்கோபுரத்தினுள் சென்றால் இடப்புறம் சூரியனும், கிழக்குத் திருமாளிகைப் பத்தியில் தனி சனீஸ்வரர், காசி விஸ்வநாதர் மற்றும் தண்டபாணி சுவாமியும் சந்நிதி கொண்டுள்ளனர். அதையொட்டி தெற்கு முகமாக உள்ள மண்டபத்துள் சிவகாமியுடன் அருட்காட்சி தருகின்றார்

ஸ்ரீ நடராஜ மூர்த்தி!

பின் சபா மண்டபம், மகா மண்டபம், இடை மண்டபம், அர்த்த மண்டபம், மூலஸ்தானம் ஆகிய அமைப்பிலான பெரும் சுவாமி சந்நிதி உள்ளது!

சபா மண்டபத்தின் இடப்புறம் நீலோற்பலாம்பாளுடன் கூடிய தியாகராஜர், யாக சாலைக்கு வந்த தோற்றத்திலேயே தனி சந்நிதி கொண்டு அருள்புரிகின்றார்! உடன் ஆதி நரமுக குழந்தை கணபதியும், குழந்தை முருகனும் உள்ளனர்!

அடுத்ததாக மகா மண்டபம்! இங்கே உற்சவ விக்ரஹங்களின் அணிவகுப்பு! சோமாசி மாறர், அவரது துணைவியார், சுந்தரர், பரவையார், சோமாஸ்கந்தர், தனி அம்பாள், காளிதேவி மற்றும் மதங்க முனிவர் ஆகியோரது சிலா வடிவங்கள் உள்ளன! பின் இடை மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை! கருவறையுள் கருணை நாயகனாய், சிறிய லிங்கத் திருவுருவில் பேரருள் புரிந்து, அருமையாக நமக்கு தரிசனமளிக்கின்றார் ஸ்ரீ மாகாளநாதர்! (ஐந்து மாகாளத் தலங்களில் இதுவும் ஒன்று).

இவரை வணங்கி, ஆலயவலம் வருகையில் உட்பிராகாரத்தின் தொடக்கத்தில் சுதை வடிவிலான பத்ரகாளியினை தரிசிக்கின்றோம்! அடுத்ததாக சோமாசி மாறர், தன் மனைவி சுசீலையுடன் கற்சிற்பமாக நற்காட்சி தருகின்றார்! பின்னர், அறுபத்து மூவர் தரிசனம்! தொடர்ந்து நாகர்கள், பிரம்மா, நால்வர், அகத்திய லிங்கம் மற்றும் யோக சுப்ரமணியர் போன்ற சிலாரூபங்கள் அணி செய்கின்றன!

தென்மேற்கில் கிழக்கு பார்த்தபடி தல கணபதி சந்நிதி கொண்டுள்ளார்! இக்கோயிலில், வாசுகி நாக தேவதையின் தனி சந்நிதியுள்ளது. இங்கே இந்தச் சிலை மீது 9 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சட்டை உரித்ததை அடையாளமாகப் பாதுகாத்து வைத்துள்ளனர்.

வெளி பிராகாரத்தில் நந்தி மண்டபம் அருகே மருதமன்னன் பூஜித்த லிங்கம் தனி சந்நிதியில் உள்ளது! தென் திசையில் “மோக்ஷ லிங்க’ சந்நிதி, மேற்கு முகமாக அமைந்துள்ளது. இங்கே காளிதேவியின் தனி சந்நிதி! இதில் கற்சிலையாக அம்பிகை அற்புத தரிசனமளிக்கின்றாள்.
மிக பிரம்மாண்டமான இவ்வாலயத்தின் வலப்புறம், அம்பாளது தனிக் கோயில் அழகே அமையப் பெற்றுள்ளது. வெளிப்புற மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைப்பிலான அம்பாள் சந்நிதி ஆகியன ஒரே பிராகாரத்துடன் விளங்குகின்றன. “ராஜ மாதங்கி’ என்று போற்றப்படும் இந்த அன்னைக்கு, “அச்சம் தீர்த்த நாயகி’ என்ற அழகிய தமிழ்ப் பெயரும் உண்டு.

முதலாம் குலோதுங்கச் சோழனால் கற்றளியாக்கப்பட்டது இவ்வாலயம்! சோழர் காலக் கல்வெட்டுகள் பல ஆலயத்தில் உள்ளன! இத்தலத்தின் விருஷமாகத் திகழும் கருங்காலி, மிருசீர்ஷ நட்சத்திரம் மற்றும் விருச்சிக ராசிக்கு உகந்த மரமாகும்! சங்க காலத்தில் “மாரோடம்’ என்ற ழைக்கப்பட்ட, தோல் நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்ட இம்மரம், செவ்வாய் தோஷத்தையும் போக்கவல்லது. தல தீர்த்தமாக ஆலயத்தின் எதிரே “மாகாள வாவி’ விளங்குகிறது.

இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த இவ்வாலயத்தில் தினமும் நான்கு கால பூஜைகள் நடக்கின்றன! தினசரி காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்!

தற்போது இவ்வாலயத்தில் விரிவாகத் திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன. திருப்பணியில் பங்கு பெற விரும்புவோர் எஸ்.தியாகராஜ சிவாச்சாரியார்-9442766818 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
வழி:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில், திருவாரூர்- மயிலாடுதுறை பேருந்து சாலையில் உள்ள பூந்தோட்டத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோவில் திருமாளம்!
பூந்தோட்டத்திலிருந்து ஆட்டோ வசதியுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *