கொங்கணசித்தர் வழிபட்ட கொங்கணேஸ்வரர்!

சிவ ஆலயம்

ஜடாமுடிக்குள் ஈசன்: தஞ்சை மாநகரை செழிக்க வைக்கும் காவிரியின் கரையில் உள்ள மகிழவனத்தில் சிவபெருமானை நோக்கி தவம் செய்துகொண்டிருந்தார் கொங்கண சித்தர். அவரது தவத்துக்கு இரங்கிய சிவன் அவருடைய ஜடாமுடிக்குள் ஐக்கியமானார். இதனால் பூலோகத்தில் உயிரினங்களும், பஞ்ச பூதங்களும் ஸ்தம்பித்தன. வழக்கம் போல் பூலோகம் மீண்டும் செயல்படுவதற்காக இந்திராதி தேவர்களும், சப்த ரிஷிகளும் புலியின் உருவம் கொண்டு சித்தரின் தவத்தைக் கலைக்க முற்பட்டனர். ஆனால் புலியைத் தனது வாகனமாகக் கொண்டு, தவத்தைக் கலைக்க வந்த புலியை விரட்டிய கொங்கண சித்தர் தவத்தைத் தொடர்ந்தார். இதைக் கண்டு திகைத்த தேவர்களும், சப்த ரிஷிகளும் மனமுருகி பிரார்த்தனை செய்தனர். அதற்கு மனமிரங்கிய கொங்கண சித்தர் “”ஓராண்டு காலம் தீப வழிபாடு செய்யுங்கள். உங்களின் பிரார்த்தனை பலிக்கும்” என்றார். அவ்வாறே தேவர்களும், சப்த ரிஷிகளும் வழிபட, கொங்கண சித்தரின் ஜடாமுடியிலிருந்து வெளிப்பட்டார் சிவபெருமான். அதன்பின் கொங்கணசித்தர் லிங்கப் பிரதிஷ்டை செய்ய, கொங்கணேஸ்வரராக அருள்புரிகிறார் ஈசன்.

கொங்கணசித்தர் பிரதிஷ்டை செய்ததால் ஈசனுக்கு கொங்கணேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இவ்வாலயத்தில் சிவனுக்கு நிகராக அம்பாளையும் பிரதிஷ்டை செய்தார் கொங்கணசித்தர். ஞானாம்பாள் என்ற பெயருடன் அருள்புரிகிறாள் அன்னை. சிவபெருமானைப் போல் ஞானாம்பாளும் ஜடாமகுடம், மான், மழு, அபய – வரத ஹஸ்தத்துடன் காட்சி தருவது சிறப்பு. இந்த அம்மனை வழிபட கல்வி ஞானம் பெருகும்.

அன்னபூரணியின் தவம்: இவ்வாலயத்தில் அனுதினமும் இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தார் பக்தர் ஒருவர். மழலைச் செல்வம் இல்லாததால் மிகுந்த துயரத்துடன் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒருநாள் குழந்தை வேண்டி கொங்கணேஸ்வரரை மனமுருகி வழிபட்டுக்கொண்டிருந்தார் அந்த பக்தர். அவரின் பக்திக்கு செவி சாய்த்த இறைவன், “குழந்தை பாக்கியம் கிடைக்கும்’ என்று அசரீரி வாக்காக ஒலித்தார். இதில் நெகிழ்ந்த பக்தர், மறுநாள் கொங்கணசித்தர் தீர்த்தமான ஐயங்குளத்திற்கு நீராடச் சென்றார். அவர் நீராடி முடித்துக் கரையேறுகையில், குளத்தின் கரையில் அழகிய பெண்குழந்தை தவழ்ந்து கொண்டிருந்தது. இறைவனின் கருணையை எண்ணி நெகிழ்ந்த அந்த பக்தர்,

குழந்தையை இரு கைகளாலும் வாரி அணைத்து இல்லத்திற்குக் கொண்டு வந்தார். குழந்தை வளர்ந்து குமரியாகி மணப்பருவத்தை அடைந்தாள். அவளுக்கு மணமகன் தேடினர். ஆனால் அவளோ, “”நான் இறைவனின் குழந்தை. இறைவனைத்தான் அடைவேன்” என்று கூறியபடி கொங்கணேஸ்வரரின் ஆலயச் சுவரில் தலையை மோதி அழுதாள். அப்பொழுது விநாயகர் அவளைத் தடுத்தாட்கொண்டு, “தவம் செய்தால் இறைவனை அடையலாம்’ என்றார். அவளும் அவ்வாறே தவம் மேற்கொண்டாள். தவத்தின் பயனாக இறைவனையே திருமணம் செய்துகொண்டாள்.

அவளே இத்தலத்தில் அன்னபூரணித் தாயாக அருளாசி வழங்குகிறாள். நான்கு கோட்டங்களிலும் அன்னபூரணி அம்மன் சிலை காட்சியளிப்பது சிறப்பு.

அன்னபூரணியின் தவத்திற்குக் காவல் இருப்பதுபோல் மேற்கு முகமாகக் காளியும், கிழக்கு முகமாகத் துர்க்கையும் அமைந்துள்ளனர்.

அன்னபூரணி அம்மன் யோகாஸனத்தில் காஞ்சி காமாட்சி அம்மனைப் போல தவநிலையில் அருள்புரிவது சிறப்பு. இவ்வாலயத்தில் கொங்கண சித்தருக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கே 365 தீபங்கள் ஏற்றுவதால் அனைத்துப் பலன்களும் கிடைக்கும்.

கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்த கொங்கணேஸ்வரரை வழிபட்டு நாமும் அனைத்து நலன்களும் பெறுவோம்.

Leave a Reply