சிதிலமடைந்த திருவெண்காடர் ஆலயம்!

சிவ ஆலயம்

சம்பகாசுரனை அழிப்பதற்காக ராமன் இந்தத் தலத்தின் இறைவனை வணங்கினாராம். இந்த சந்தியா பாறையில் ராமபிரான் ஏறி நிற்க, அவர் முன் நேர்நிலையிலும் கீழ்த் திசையிலும் சிவ ஜோதி தோன்றி, சம்பகன் இருக்கும் இடத்தைக் காட்டியதாம். பாப்பான்குளம் திருவெண்காடரும், மடவார்விளாக திருக்கருத்தீசருமே இவ்வாறு ஜோதியாகத் தோன்றி ராமபிரானுக்கு வழிகாட்டினர் என்பர். அதனால், பாப்பான்குளம் திருவெண்காடரை ராமபிரான் வணங்கியதாக தலபுராணம் சொல்கிறது. பொதிகை மலைச் சாரல் தவழும் சிவசைலம் அருகிலுள்ள சம்பங்குளத்தில்தான் சம்பகவதம் நடந்ததாகச் சொல்வர். இதற்கு ஏற்ப, பாப்பான்குளம் சிவன் கோயில் அருகே பழநி ஆண்டவர் கோயிலும், அதன் எதிர்ப்புறம் ராமசாமி பெருமாள் கோயிலும் உள்ளன.

பார்ப்பு இனம் என்பது, பறவைகள், தவளை, ஆமைகளின் குஞ்சுகளை உணர்த்தும். இங்குள்ள குளத்தில் இவை ஒலி எழுப்பியதால், இவ்வூருக்கு பார்ப்பு ஆர் குளம் என்ற பெயர் ஏற்பட்டதாம். ஆர்-ஆர்த்தல்-கூடி ஒலித்தல் என்பது பொருள். இவ்வூர்க் கல்வெட்டில் -ராஜசதுர்வேதி மங்கலத்தின் வடமேற்கே வேளார்குறிச்சியில் பகவதி விண்ணகர் ஆழ்வார் – என்ற வாசகம் உள்ளது. அதன்படி, நான்கு வேதங்களும் அறிந்த அந்தணர்கள் வாழ்ந்ததால் பாப்பான்குளம் என்ற பெயர் வந்திருக்கலாம்.

பாண்டியன் ஆதித்தவர்மன் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாப்பான்குளம் திருவெண்காடர் கோயில் இன்று சிதிலமடைந்துள்ளது. கிழக்கு திசை நோக்கிய இக்கோயிலில் வாடாகலைநாயகி அம்மை காட்சி தருகிறார். முப்பத்திரண்டு கலையம்சங்களுடன் கூடிய அம்பாள் திருவுருவைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சிற்பி ஒருவர், சங்கப் புலவர்கள் போல் தன் பெயரை உரைக்காமல் கல்குறிச்சி என்ற பெயருடனும் இவ்வூரில் வாழ்ந்து பல சிற்பங்கள் செய்தவர். அவர் பெயரால் இவ்வூரில் கல்லக்குறிச்சி குளமும் உள்ளது. திருவெண்

காடர் லிங்கமும், வாடாகலை நாயகி சிற்பமும் உயர் ரகக் கற்களால் இச்சிற்பி வடித்ததாகும். கோயிலின் உள்பிராகாரங்களில் உள்ள தூண்களில் சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.

இங்குள்ள சனிஈஸ்வரரை சோழனின் படைத்தளபதி வழிபட்டு, சனி தோஷம் நீங்கப் பெற்றான். அதன் பிறகே அவனுக்கு, சேரனை வெல்வதற்கான பலம் கிடைத்தது என்பர். இவ்வகையில் எதிரிகளை வெற்றி கொள்ள இங்குள்ள சனி ஈஸ்வரரை வணங்குதல் நலம் பயக்கும்.

கருணை நதியும் (கடனா நதி) ராமநதியும் (வராக நதி) இவ்வூரில் சங்கமிக்கும் இடத்தை இரண்டாத்து முக்கு என்கிறார்கள். இதில், ஆனி, ஆடி மாத சனிக்கிழமைகளில் குளித்து திருவெண்காடரையும், வாடாகலை நாயகியையும் தரிசித்து, நல்லெண்ணெய் விளக்கேற்றினால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

கங்கையிலிருந்து அத்ரி முனிவர் கடனாகப் பெற்று உற்பத்தி செய்த ஆறு கடனா நதி. அகத்தியரின் கமண்டலத்திலிருந்து சிதறிய துளி ராமநதி. இந்த இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் தீர்த்தமாடுவதால் புண்ணியம்

கிட்டும்

சோழ மன்னனுக்கு எதிரியை வெல்ல பலம் கொடுத்தது போலவும், ராமபிரானுக்கு சம்பகனை வதம் செய்ய அருளியது போலவும் நம் எதிரிகளை வெற்றிகொள்ள இக்கோயிலில் வழிபடலாம்.

மாசி மாதத்தில் தேர்த் திருவிழா நடைபெற்ற கோயில், இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இக்கோயிலை செப்பனிட்டு திருப்பணிகள் செய்ய பாப்பான்குளம் மெய்யன்பர்கள் முடிவு செய்துள்ளார்கள். இக்கோயில் திருப்பணி குறித்து தொடர்பு கொள்ள: டாக்டர் ராமசாமி (செல்: 98949 62523)

திருநெல்வேலி மாவட்டம் பொட்டல்புதூரில் இருந்து முக்கூடல் செல்லும் வழியில் உள்ளது இந்த பாப்பான்குளம் கிராமம்.

Leave a Reply